கரோனா தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும், மற்றவர்களுக்கு நோய் பரப்பாத வகையில் அவர்களைத் தனிமைப்படுத்துவதும்தான் கரோனா தொற்று பரவாமல் தடுக்க ஒரே வழி. ஆனால், தமிழ்நாட்டில் போதுமான அளவில் பரிசோதனைகள் நடைபெறவில்லை என்று தொடர்ந்து மருத்துவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் குற்றம் சாட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
அந்தப் பிரச்சினையைச் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு காரியத்தைச் செய்திருக்கிறது தமிழக அரசு. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக, பரிசோதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை ஊடக செய்திக் குறிப்பில் வெளியிட்டு வந்த சுகாதாரத்துறை, நேற்று முதல் அந்த விவரத்தை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டது.
இதுகுறித்து கல்பாக்கம் மருத்துவர் வீ.புகழேந்தி ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறியதாவது:
"வழக்கமாக சுகாதாரத்துறை தினமும் வெளியிடுகிற கோவிட் புள்ளிவிவரப் பட்டியலில் 4-வது பாயின்ட்டாக, பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையும், 5-வது பாயின்ட்டாக, பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இடம்பெற்றிருக்கும். எப்போதுமே, பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை கூடுதலாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஒரே நபரிடம் இருந்து ரத்தம், சளி என ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகளை எடுப்பதுண்டு.
தமிழ்நாட்டில் வல்லுநர் குழு சொன்ன அளவான 18 ஆயிரம் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் என்று என் போன்றோர் மக்கள் நலனில் கொண்ட அக்கறையால்தான் சொன்னோம். ஆனால், எண்ணிக்கையை வெளியிடுவதால்தானே பிரச்சினை என்று நேற்று முதல் பரிசோதிக்கப்படுபவர் எண்ணிக்கையை வெளியிடுவதை தமிழக அரசு நிறுத்திக்கொண்டது. அதற்குப் பதிலாக, பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கையை மட்டுமே அரசு வெளியிட்டிருக்கிறது.
அதேபோல, சுகாதாரத்துறை வெளியிடும் ஊடக செய்திக் குறிப்பில், புதிதாகக் கண்டறியப்பட்ட நோயாளிகளின் விவரங்களை (பெயர் மட்டும் இருக்காது) கேஸ் ஐடி, வயது, பாலினம், மாவட்டம், பிரைமரி அல்லது கான்டாக்ட் என்ற விவரங்களையும் வெளியிடுவது வழக்கம். ஆயிரம் தொற்றாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டாலும் ஆயிரம் பேரின் விவரமும் இவ்வாறு வெளியிடப்படும். ஆனால், தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கடந்த 2 நாட்களாக இந்த விவரம் இல்லை. இதெல்லாம் தமிழக அரசு திட்டமிட்டே எல்லாவற்றையும் மறைக்கிறதோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
உலக சுகாதார நிறுவனம் கூறும் கணக்குப்படி பார்த்தால், ஏழு கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் தினமும் குறைந்தது 30 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு அமைத்த வல்லுநர் குழு சொன்னபடியே பார்த்தாலும் தினமும் 18 ஆயிரம் பரிசோதனைகள் தேவை. ஆனால், இப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் 50 முதல் 100 பரிசோதனைகள் கூட செய்யப்படவில்லை என்று தகவல் வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் பாதிப்பு மோசமாக இருக்கும்" என்றார் மருத்துவர் புகழேந்தி.