இயற்கையைப் பாதுகாத்தால் மட்டுமே மனித குலத்தைக் காப்பாற்ற முடியும் என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அன்புமணி இன்று (ஜூன் 4) வெளியிட்ட அறிக்கை:
"உலக சுற்றுச்சூழல் நாள் நாளை கொண்டாடப்படும் நிலையில், இயற்கை மீது கடந்த காலங்களில் நாம் நடத்திய தாக்குதல்கள் இப்போது நம்மை எவ்வாறு திருப்பித் தாக்கத் தொடங்கியுள்ளன என்பதை அண்மைக்காலமாக நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இனியாவது இயற்கையை நாம் மதிக்காவிட்டால் மனித குலத்தைக் காப்பாற்ற முடியாது என்பதை உணர வேண்டும்.
உலகின் முதல் சுற்றுச்சூழல் மாநாடு 1972 ஆம் ஆண்டு சுவீடனின் ஸ்டாக்கோம் நகரில் கூட்டப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் நாளாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் முழக்கமாக 'இயற்கையைக் காப்பதற்கான நேரம்' என்பதை இந்த ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்மொழிந்துள்ள முழக்கம் தேவையான, மிகச்சரியான நடவடிக்கையாகும்.
இயற்கை மிகவும் உன்னதமானது. உலகில் உள்ள அனைவரையும் அரவணைக்கக் கூடியது. அதனால்தான் இயற்கையை அன்னை என்று அழைக்கிறோம். ஆனால், நாம் அன்னைக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை இயற்கைக்குக் கொடுப்பதில்லை.
மனிதனின் சுயநலத்திற்காக இயற்கையைக் காவு கொடுக்க நாம் தயங்குவதில்லை. அதனால், இயற்கை அதன் குணத்திலிருந்து மாறி, பேரிடர்களை வழங்கத் தொடங்கியிருக்கிறது. உலகம் முழுவதும் 66 லட்சம் பேரை பாதித்திருப்பதுடன், சுமார் 4 லட்சம் பேரின் உயிரையும் பறித்த கரோனா வைரஸ் உருவானதற்கு காரணம் காலநிலை மாற்றம் தான். இயற்கையையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கத் தவறியதன் விளைவே காலநிலை மாற்றமும், புவி வெப்பயமாதலும் ஆகும்.
புவி வெப்பயமாதலின் தீய விளைவுகள் பட்டியலிட முடியாத அளவுக்கு நீண்டவை. காலநிலை மாற்றம் காரணமாக மழைக்காலத்தில் வெயில் கொளுத்துவதும், கோடைக்காலங்களில் புயல் தாக்குவதும் வாடிக்கையாகி வருகின்றன. தமிழ்நாடு கடந்த 7 ஆண்டுகளில் தானே, வர்தா, ஓகி, கஜா ஆகிய 4 புயல்களைச் சந்தித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தைக் கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஃபானி புயல் தாக்கிய நிலையில், இந்த ஆண்டு கோடையில் 'உம்பன்' புயல் தாக்கியுள்ளது. வங்கக் கடலில் கோடைக் காலத்தில் புயல்கள் உருவாவது அதிசயம் ஆகும். கடந்த 150 ஆண்டுகளில் 3 முறையும், கடந்த 43 ஆண்டுகளில் ஒரு முறையும் மட்டுமே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
ஆனால், கடந்த ஆண்டு ஒடிசாவை கோடை புயல் தாக்கிய நிலையில், நடப்பாண்டில் மீண்டும் கோடை புயல் தாக்கியிருப்பது சாதாரணமான ஒன்றல்ல. இனி வரும் காலங்களில் ஏற்படப்போகும் ஆபத்துகளின் அறிகுறிகளாகும்.
பாலைவன நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் வெட்டுக்கிளிகளின் பெருக்கம் ஏற்பட்டு, அது இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியர்கள் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கும் கேரளத்தில் கருவுற்ற யானை பழத்தில் வெடி வைத்துக் கொல்லப்பட்டிருப்பதும் இயற்கை மீதான தாக்குதலின் தீய விளைவு தான் ஆகும்.
மனிதர்கள் அவர்களின் சுயநலத்திற்காக காடுகளை அழித்ததன் விளைவாகத் தான் யானைகள் ஊருக்குள் வருவதும் வயல்களில் நுழைவதும் வழக்கமாகிப் போனது. இதற்கெல்லாம் தாம் தான் காரணம் என்பதை உணராத மனிதன், யானையை வெடிமருந்து வைத்துக் கொலை செய்வது மனிதனின் சுயநலம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது.
புவி வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் குறைக்காவிட்டால் அடுத்த சில பத்தாண்டுகளில் பேரழிவுகள் அதிகரிக்கும். மனிதகுல அழிவுக்கு வழிவகுக்கும். அதைத் தடுக்க வேண்டுமானால் இயற்கையையும், அதன் மூலமாக சுற்றுச்சூழலையும் நாம் பாதுகாக்க வேண்டும். இதை உணர்ந்து நமது முன்னோர்களின் வழியில் இயற்கையை தெய்வமாக வணங்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையுள்ள மத்திய, மாநில அரசுகளும் நிலக்கரி உள்ளிட்ட படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அரசின் கடமை என்று மக்கள் ஒதுங்கி இருக்காமல் அனைவரும் ஒன்றுபட்டு இயற்கையையும் சுற்றுச்சூழலையும் காக்க உழைக்க வேண்டும்".
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.