திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நல்லடிசேனை கிராமத்தில் விவசாய நிலத்தில் வெட்டுக்கிளி மற்றும் கருப்பு வண்டு பயிர்களைச் சேதம் செய்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
வந்தவாசி அடுத்த ஆளியூர் என்ற கிராமத்தில் சூரியமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களாக வெட்டுக்கிளி பயிர்களைச் சேதம் செய்வதாக விவசாயிகள் கவலை அடைந்து இருந்தனர்.
அதேபோல், இரண்டு கிலோ மீட்டர் அருகில் உள்ள நல்லடிசேனை என்ற கிராமத்தில் பெருமாள் என்ற விவசாயி தனது இரண்டரை ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார்.
நேற்று (ஜூன் 3) மாலை முதல் பெருமாளுடைய விவசாய நிலத்தில் நெற்பயிரில் வெட்டுக்கிளி மற்றும் கருப்பு வண்டு அதிக அளவில் பயிரில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பயிர்களில் காணப்படும் வெட்டுக்கிளி என்றாலும் புதிதாக வெட்டுக்கிளி உடன் சேர்ந்து கருப்பு வண்டுகள் பயிரைக் கத்தரித்து சேதம் செய்து வருகிறது. இதனால் அவர் பயிரிட்ட அனைத்துப் பயிர்களும் உற்பத்தியாகாமல் வீணாவதாகவும் தெரிவித்தார்.
மேலும் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் யூனியன் பகுதிகளில் இரண்டு கிராமங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களைச் சேதம் செய்வது விவசாயிகளிடையே மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெட்டுக்கிளிகள் குறித்து வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.