தமிழகம்

தமிழகத்தில் 23 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம்- 32 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் 23 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், 32 துணை ஆட்சியர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுக்கான வருவாய் குறைந்துவிட்டது. இதையடுத்து, அரசின் செலவினங்களைக் குறைக்கும் வகையில் துறைகள் தோறும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தேவை ஏற்பட்டால் மட்டுமே பணியிட மாற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பணியிடத்தில் இருப்போரை பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், காலிப் பணியிடங்களை கருத்தில் கொண்டு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருவாய்த் துறையில் தற்போது பதவி உயர்வு, இடமாற்றம் அறிவிக்கப்ட்டுள்ளது.

இதன்படி தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முக்கிய பதவிகளில் உள்ள 23 மாவட்ட வருவாய் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 32 துணை ஆட்சியர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அதிகாரிகளாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி என்.சுந்தரமூர்த்தி, நகராட்சி நிர்வாக இணை ஆணையராகவும், பேரிடர் மோலண்மைத் துறை இணை இயக்குநர் டி.பழனிகுமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பதவி உயர்வில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாளர், எஸ்.கீதாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு, சென்னை மாநகராட்சி 6-வது மண்டல அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். காஞ்சிபுரம் துணை ஆட்சியர் எஸ்.தங்கவேலு, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT