தமிழகம்

தண்ணீர் வரும்போதுதான் தூர்வாரும் பணி நடைபெறுகிறது; 20,000 கிலோமீட்டர் தொலைவுக்கு டெல்டாவில் வாய்க்காலே இல்லை- திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

காவிரி டெல்டா பகுதியில் மொத்த முள்ள 45 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வாய்க்கால்களில் தற்போது 15 முதல் 20 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வாய்க்காலே இல்லை என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கும், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு.கருணாநிதியின் உருவப் படத்துக்கும் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்எல்ஏ, மத்திய மாவட்டப் பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மலர்தூவி நேற்று மரியாதை செலுத்தினர். பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கப்பட்டு வருகிறது. திருச்சியில் மட்டும் தற்போது 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட் டுள்ளன. இந்த நாடு உள்ளவரை கருணாநிதியின் புகழ் இருக்கும்.

மழை பெய்யும்போதும், ஆற்றில் தண்ணீர் திறக்கும்போதும் தான் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளுக்கான திட்டத்தை அதிமுக அரசு மேற்கொள்கிறது. சிமென்ட் போன்ற கட்டுமான பணிகளில், என்ன செய்துள்ளனர் என்பதை எளிதில் அளவிட்டுவிட முடியும். ஆனால், மண்ணில் மேற்கொள்ளும் பணிகளை அவ்வாறு அளவிட முடியாது. எனவேதான் தொடர்ந்து இப்படி செய்து கொண்டுள்ளனர்.

குடிமராமத்துப் பணிகளால் காவிரியின் கடைமடை வரை தண்ணீர் செல்லும் என்கின்றனர். ஆனால், டெல்டா மாவட்ட பகுதியில் உள்ள 45 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவு வாய்க்கால்களில் தற்போது 15 முதல் 20 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு வாய்க்காலே இல்லை.

தூர்வாருதல் மற்றும் குடிமரா மத்துப் பணிகளை ஜனவரி மாதத் திலேயே ஆரம்பித்திருந்தால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். கடைசி நேரத்தில் வேலை செய்வது அவ்வளவு சரியாக இல்லை என்றார்.

இதேபோல வி.என்.நகரிலுள்ள தெற்கு மாவட்ட திமுக அலு வலகத்தில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த மு.கருணாநிதி உருவப்படத்துக்கு, மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அங்கு 100 ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT