கரோனா பரிசோதனை செய்ய ஆதார் எண் கட்டாயம் பெற வேண்டும் என்று சென்னையில் கரோனாபரிசோதனை மேற்கொள்ளும் ஆய்வகங்களுக்கு மாநகராட்சிஆணையர் கோ.பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் உள்ள கரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு மாநகராட்சி ஆணையர் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னையில் கரோனா தொற்று பரிசோதனை செய்ய 10 அரசு ஆய்வகங்கள், 13 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆய்வகங்களும், பரிசோதனை செய்யப்பட்ட விவரங்களை அரசுபொது சுகாதாரத்துறை மற்றும் சென்னை மாநகராட்சிக்கு தெரிவித்து வருகின்றன.
இருந்தபோதிலும், தனியார் ஆய்வகங்கள் வழங்கும் விவரங்கள் முழுமையாக இல்லை. அதனால் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரின் தொடர்புகளை கண்டறிய முடிவதில்லை. அதன் விளைவாக சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ளாத கரோனா தொற்று உள்ள நபர், பலருக்கு கரோனா பரவ காரணமாகிறார். அவருக்கும் முறையான சிகிச்சை கிடைக்காமல் போகிறது.
இந்த சூழலில் அனைத்து ஆய்வகங்களும், பரிசோதனைக்கு வருவோரின் பெயர், கதவு எண், சரியான தெரு பெயர், பகுதி பெயர், அஞ்சல் பின்கோடு எண் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட சரியான விவரங்களை சேகரிக்க வேண்டும். பரிசோதனைக்கு முன்பாக, பரிசோதனைக்கு வருவோரிடம் இருந்து பெறப்படும் கைபேசிஎண்ணை, உடனே தொடர்புகொண்டு, அவருடையது தானா என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆதார் எண் இன்றி, கரோனா அறிகுறிகளுடன் இருந்தால், மாதிரிகள்சேகரிக்கப்பட்டு, பரிசோதனை முடிவு வரும் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.