தமிழகம்

கடையநல்லூர் அருகே 2 மாதமாக விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ள யானைகள்: காட்டுக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

த.அசோக் குமார்

கடையநல்லூர் அருகே விவசாய நிலங்களில் 2 மாதத்துக்கு மேலாக முகாமிட்டுள்ள யானைகளை காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஜாகிர் உசேன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் இன்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடையநல்லூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட வடகரை, ராயர்காடு, சென்னாபொத்தை, சீவலன்காடு மற்றும் சுற்றுவட்டார விவசாய நிலங்களுக்குள் கடந்த 2 மாதத்துக்கு மேலாக 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு, சேதப்படுத்தி வருகின்றன.

நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள், மா மரங்களை வேரோடு சாய்த்தும், முறித்தும் போட்டுள்ள. பாதுகாப்புக்காக போடப்பட்ட சோலார் வேலி, மின்சார மோட்டார்கள், தண்ணீர் குழாய்கள் போன்றவற்றையும் பிடுங்கி எறிந்துள்ளன.

இதனால், விவசாய நிலங்களுக்கு செல்ல அச்சமாக உள்ளது. பட்டாசு வெடித்து விரட்டினாலும் அங்கிருந்து சென்று அருகில் உள்ள மற்ற விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்துகின்றன. காட்டுக்குள் செல்லாமல் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. அவற்றில் 2 யானைகள் மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளன. பட்டாசு வெடித்தும் விரட்டினாலும் பயப்படாமல் விவசாயிகளை விரட்டுகின்றன.

யானைகளை காட்டுக்குள் விரட்ட பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், வன விலங்குகளால் ஏற்பட்ட சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கவில்லை. யானைகளை விரட்ட கடையநல்லூர் வரச்சரகத்தில் போதுமான வனத்துறையினர் இல்லை. எனவே, தனிக் குழு அமைத்து யானைகளை நிரந்தரமாக காட்டுக்குள் விரட்டவும், மீண்டும் விவசாய நிலங்களுக்குள் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக் வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, “யானைகளை காட்டுக்குள் விரட்ட உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்காவிட்டால் வனத்துறை அலுவலக வளாகத்துக்குள் விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டு அங்கேயே இருந்து காத்திருப்பு போராட்டம் நடத்துவோம்” என்றனர்.

SCROLL FOR NEXT