தமிழகத்தில் சமய வழிபாட்டுத்தலங்களை திறப்பது குறித்து மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் அனைத்து சமயத்தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
கரோனா நிலையை கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் உள்ள சமய வழிப்பாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அவ்வாறு திறக்கும்போது கடைபிடிக்கவேண்டிய கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் பற்றியும் கருத்துகளை பெற ஜூன் 3 புதன்கிழமை மாலை 4-45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் 2 வது கட்டத்திலுள்ள கூட்ட அரங்கில் சமயத்தலைவர்களுடன் தலைமைச் செயலர் தலைமையில் நடந்தது.
கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்க தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இந்த நடைமுறை இந்தியா முழுவதும் அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து சமய வழிபாட்டுத்தளங்களும் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டது.
தற்போது 5-ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மாநிலங்கள் முடிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதனால் வழிபாட்டுத்தலங்களை திறக்கவும் தனி மனித இடைவெளியுடன் பொதுமக்கள் வர அனுமதிக்கலாம் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து மத அமைப்புகள், சமயத்தலைவர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக்கூட்டத்தில் இந்து, இஸ்லாம், கிருத்துவ, ஜெயின் மத தலைவர்கள் கலந்துக்கொண்டனர். ஜெயின் மதத்தின் பிரதிநிதிகள் 3 பேர், இந்து, முஸ்லீம் சமய முக்கியஸ்தர்கள் தலா 7 பிரதிநிதிகள், கிருத்துவ மத பிரதிநிதிகள் 9 பேர் கலந்துக்கொண்டனர். ஒவ்வொருவரிடமும் தலைமைச் செயலர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
இதில் கோயில்களை திறக்க வேண்டும், டோக்கன்கள் கொடுத்து பக்தர்களை வரவழைக்கலாம், பூஜை, அபிஷேகம் நேரத்தில் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது, வரிசையாக நிற்பதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியுடன் கும்பிட அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்புகள் சார்பில் ஆலோசனை வைக்கப்பட்டது.
தொடர்ந்து இஸ்லாமிய, கிருத்துவ அமைப்பின் பிரதிநிதிகளிடம் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில் கிடைக்கப்பெற்ற தகவல்களை முதல்வர் கவனத்துக்கு கொண்டுச் சென்று பின்னர் முதல்வர் ஆலோசித்து முடிவெடுத்து அறிவிப்பார்.