சி.எம்.ஜெயராமன் 
தமிழகம்

கரோனா பரிசோதனைகளைக் கைவிடலாமா?- பொது இடங்களில் குவியும் கூட்டத்தால் அபாயம்

ஆர்.கிருஷ்ணகுமார்

பொது இடங்களில் திரளும் மக்கள் கூட்டத்தால் மீண்டும் கரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உரிய முறையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் அமைப்பு தலைவர் சி.எம்.ஜெயராமன் 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது:

"கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது ஊடரங்கும் தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொது இடங்களில் மீண்டும் கூட்டம் கூட்டமாக மக்கள் திரள்கின்றனர். ஆனால், முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால், மீண்டும் கரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், தினமும் எவ்வளவு பேரை பரிசோதிக்கிறார்கள், அவற்றின் முடிவுகள் என்ன உள்ளிட்ட எந்த விவரங்களும் வெளியிடப்படுவதில்லை. உண்மையில், பல இடங்களில் கரோனா தொற்றுப் பரிசோதனைகளே செய்யப்படுவதில்லை.

இனி கரோனா தொற்று ஏற்படப்போவதில்லை என்ற அலட்சியத்துடன் பலரும் நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, மருத்துவமனைகள், ரயில், பேருந்து நிலையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என மக்கள் கூடும் இடங்களில் மீண்டும் ரேபிட் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு குறைந்த செலவுதான் ஆகும். ஆனால், நோய் வந்துவிட்டால், குணப்படுத்த தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் வசூலிப்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

எனவே, உரிய முறையில் பரிசோதனைகள் மேற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விமானம் மற்றும் நீண்ட தொலைவு ரயில் பயணங்கள் மேற்கொள்வோருக்கு கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் மற்ற ஊர்களுக்கு தொற்று பரவுவதைத் தடுக்க முடியும்.

கரோனா சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகளில் தினமும் மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு மனுவும் அனுப்பியுள்ளோம்"

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT