பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 90 ஆக உயர்வு 

அ.முன்னடியான்

புதுச்சேரியில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 83 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 53 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் புதிதாக நெட்டப்பாக்கம், மேட்டுப்பாளையம், தவளக்குப்பம், தருமாபுரி, முத்தியால்பேட்டை, கதிர்காமம், முருங்கப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்கள் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஜிப்மர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆகவும், மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 30 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் குணமாகியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 3) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் தற்போது புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. இதில் 38 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 17 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், சேலம், சென்னையில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் கரோனா பாதிக்கப்பட்டோர் யாரும் இல்லை. ஊரடங்கு தளர்வினால் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்து வருகின்றது. தற்போது 75 வயது மூதாட்டி மற்றும் 80 வயது முதியவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். எனவே மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT