எண்ணெய் விலை வீழ்ச்சியால் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏழை-எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர்களை மானிய விலையில் வழங்கி வருகிறது. அதன்படி ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா 14.2 கிலோ எடையுள்ள 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மானியத் தொகை நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டும் வருகிறது. இதன் மூலம் நாட்டில் மொத்தம் 18.11 கோடி மக்கள் சமையல் சிலிண்டருக்கான மானியத்தை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் வரை சிலிண்டர் முன்பதிவு செய்து ரூ.782 பணம் செலுத்தி பெற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு மானியத் தொகை கிடைக்கப்பெற்றது. அதேநேரத்தில் மே மாதம் பதிவுசெய்து, ரூ.584.5 பைசா செலுத்திய சிலிண்டர் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை சென்றடையவில்லை என்றத் தகவல் கிடைத்ததையடுத்து, சிலிண்டர் விநியோக முகவர்களை அணுகிக் கேட்டபோது, தற்போது மானியத் தொகை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன முகவரான ஸ்ரீராமிடம் கேட்டபோது, "தற்போது எரிவாயு நிரப்பிய சிலிண்டர் அடிப்படை விலையை எட்டியிருப்பதால் மானியம் வழங்க வாய்ப்பில்லை என அறிகிறேன். மானியத்தை நிறுத்திவிட்டதாக கருதுவதும் தவறு. நிறைய பேருக்கு சிலிண்டரின் அடிப்படை விலைக் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.
கடந்த சில ஆண்டுகளாக சிலிண்டரின் விலை ரூ.600 என்ற அளவிலேயே இருந்ததால், ஏதோ ஒரு தொகை மானியமாக கிடைத்து வந்ததால் அவர்கள் அதை அறியவும் வாய்ப்பில்லை. தற்போது கரோனா வைரஸ் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக எரிவாயு சிலிண்டரின் அடிப்படை விலையும் குறைந்துவிட்டக் காரணத்தினால் தற்போது சிலிண்டரின் விலை 584.50 பைசாவாக குறைந்துள்ளது. சிலிண்டரின் அடிப்படை விலை ரூ.500-க்கு குறைவானால் மானியம் கிடையாது. அந்த வகையில் தற்போது குறைந்துள்ளது.
தற்போது கூடுதலாக ரூ.84 என்பது கடந்த 2017 ஆகஸ்டு மாதம் முதல் மாதம் ரூ.2 உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்கள் முகவர்களுக்கு அனுமதி அளித்துள்ளதன் பேரில் உயர்த்தப்பட்டத் தொகை. எனவே, சிலிண்டரின் அடிப்படை விலை 500 ரூபாயைக் காட்டிலும் அதிகரிக்கும் பட்சத்தில் மானியம் கிடைக்க வாய்ப்புண்டு" என்றார்.