கரோனா பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சமூக விரோதச் செயல்கள் அறவே குறைந்திருந்தன. படிப்படியாக அதில் தளர்வுகள் வந்ததன் விளைவு சாதாரண நாட்களை விட இந்த நாட்களில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர் போலீஸார்.
குறிப்பாக, கோவையில் கடந்த சில வாரங்களில் மட்டும் எட்டு கொலைகள் நடந்துள்ளன. அதில் பெரும்பாலானவை மிகச்சாதாரண விஷயங்களுக்காக நடந்தவை. ஒரு சில கொலைகள் எதற்கு நடந்தது என்றே இன்னும் அறியமுடியாதவை என்பதுதான் அதிர்ச்சி.
சம்பவம் 1
பெரியநாயக்கன்பாளையம் காவல் சரகத்திற்குட்பட்ட கோவனூர். இங்கிருந்து பாலமலை செல்லும் வழியில், அத்திமாரியம்மன் கோயில் அருகே, உள்ள அண்ணன் - தம்பி பள்ளத்தில், 40 வயது மதிக்கத்தக்கவரின் உடல் கருகி, அழுகிய நிலையில் கிடந்தது. உடலின் ஒரு பகுதி, தீயினால் கருகிக் கிடந்தது. இந்த சம்பவம் நடந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. இன்னமும் கொலை செய்யப்பட்டவர் பற்றியோ, கொலை செய்தவர்கள் பற்றியோ துப்புத் துலங்கவில்லை.
சம்பவம் 2
6 நாட்கள் முன்பு மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்த கோவில்மேடு பம்ப் ஹவுஸ் அருகே நைலான் கயிறால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவரது உடல் கிடந்தது. இதனை பவானிசாகர் அணையில் மீன் பிடிப்பவர்களைக் கண்காணிக்கும் வாகன ஓட்டுநர் ஒருவர் பார்த்துப் போலீஸுக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீஸார் நடத்திய விசாரணையில், கொலையுண்டவர் ஈரோடு மாவட்டம், பவானிசாகர், சுஜில் குட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி என்று தெரிந்தது. உடலில் சில இடங்களில் காயங்கள் இருந்ததை வைத்து, இறப்பதற்கு முன்பு அந்த நபர் எதிரிகளிடம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடியிருப்பதை போலீஸ் ஊகித்தது. இதுவரை கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவம் 3
38 வயது அண்ணாமலையும், 26 வயது ப்ரியாவும் கணவன் மனைவி. கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரிய குயிலி கிராமத்தில் 6 வருடங்களாக குடியிருந்து வருகின்றனர். இதில், அண்ணாமலை திடீரென்று இறந்துவிட்டார். அவரை இயற்கை மரணம் என்று சொல்லி தனது அக்கா கணவருடன் சேர்ந்து சேலம் பெருச்சாளி நத்தம் கிராமத்திற்குக் கொண்டு சென்று உடலைத் தகனம் செய்ய முயன்றிருக்கிறார் ப்ரியா. கரோனா கால கெடுபிடி விசாரணைகளில் அண்ணாமலையின் இறப்பு இயற்கையானது அல்ல என்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், சம்பவ நாளில் கணவன், மனைவி இருவருமே மது அருந்தி உள்ளனர். அப்போது ப்ரியா மீது சந்தேகப்பட்டு அண்ணாமலை பேச இருவருக்குள்ளும் சண்டை மூண்டுள்ளது. இருவருக்குள்ளும் நடந்த அடிதடியில் அண்ணாமலை கொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்போது ப்ரியா சிறைக்குள் இருக்கிறார்.
சம்பவம் 4
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சோட்டிலால். வயது 40. மனைவி சகுந்தலா வயது 37. கடந்த 8 ஆண்டுகளாக கோவை ஈச்சனாரி கணேசபுரம் பகுதியில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சோட்டிலால், இரண்டு மாதத்திற்கு முன்புதான் மனைவியைக் கோவைக்கு அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் ஒரு வாரம் முன்பு, சகுந்தலா மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரிக்கப்பட்டார். கணவர் சோட்டிலால் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் விசாரணையில், குடிப்பதற்குப் பணம் கேட்டுத் தர மறுத்ததால் வந்த வாக்குவாதத்தில், மனைவியை எரித்துக் கொன்றதாக சோட்டிலால் வாக்குமூலம் கொடுத்தார். இப்போது சோட்டிலால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் 5
அழகுக்கு 55 வயது. சேகருக்கு 53 வயது. இரண்டு பேரும் அண்ணன் தம்பிகள். சம்பவத்தன்று இருவரும் ஒரு துக்க காரியத்துக்குச் சென்றவர்கள் மதுப்புட்டிகளுடன் வீடு திரும்பி இருக்கிறார்கள். வீட்டில் வைத்து இருவரும் மது அருந்திய நிலையில், இருவருக்குமான கொடுக்கல் வாங்கல் தகராறு, வாய் வார்த்தையில் தொடங்கி கைகலப்பில் முடிந்திருக்கிறது. இதன் உச்சமாக, அண்ணன் அழகுவை தம்பி சேகர் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டார். தம்பி கைது செய்யப் பட்டார் என்கிறது போலீஸ். கோவை சாயிபாபா காலனி, கேகேபுதூர் அண்ணாநகரில் இச்சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகின்றன.
சம்பவம் 6
பொள்ளாச்சி திவான்சாபுதூர் கிராமம். மாணிக்கம் (வயது 60), பழனாள் (வயது 57). கணவன் - மனைவி இருவரும் பண்ணைக்கூலிகள், மிதமிஞ்சிய போதையில் இருந்த இருவருக்கும் வந்த சண்டை, இறுதியாகத் தம்ளரில் இருந்த மதுவைப் பங்கு பிரிப்பதில் வந்து நின்றது. உச்சத்தில் மனைவியைக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்றுவிட்டார் மாணிக்கம் என்கிறது போலீஸ். இது 2 வாரம் முன்பு நடந்தது.
சம்பவம் 7
கோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சென்னையன் (வயது 43). தன் வீட்டிற்கு அருகே குடிபோதையில் தனது தாயுடன் தகராறு செய்து கொண்டிருந்த அசோக்குமாரை (24) தட்டிக் கேட்டுள்ளார் சென்னையன். அந்த ஆத்திரத்தில் அசோக்குமார் சென்னையனை கத்தியால் குத்தி விட்டார். சென்னையன் ஆஸ்பத்திரி கொண்டு போகும் வழியிலேயே இறந்தார்; அசோக்குமாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். இது நேற்று முன்தினம் நடந்த சம்பவம்.
சம்பவம் 8
இதுவும் நேற்று முன்தினம் நடந்த சம்பவம்தான். கோவை செல்வபுர,ம் பனைமரத்தூர் முருகன் (வயது 53). இவர் மகன் திவாகர் (வயது 22). இருவருமே கூலித்தொழிலாளிகள். நேற்று முன் தினம் இரவு மிதமிஞ்சிய மது போதையில் வீட்டுக்கு வந்த திவாகருக்கு, முருகன் கதவைத் திறந்து விட மறுத்திருக்கிறார். நீண்ட நேரம் கழித்துக் கதவு திறந்த பின்னரும் இருவருக்கும் சண்டை மூண்டிருக்கிறது. இறுதியில், தந்தை முருகனை கம்பியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் திவாகர்.
இதை மறைத்து மாரடைப்பு என்று மகன் நாடகமாடி சடலத்தை எரியூட்ட மயானம் வரை கொண்டு சென்று விட்டனர் . இறுதியில், நெஞ்சில் இருந்த ரத்தக் காயத்தைப் பார்த்து போலீஸுக்குத் தகவல் பறக்க திவாகர் கைது செய்யப்பட்டார்.
இந்த தொடர் கொலை சம்பவங்கள் குறித்து கோவை போலீஸார் கூறுகையில், “பொதுமுடக்க காலத்தில் எல்லோரும் வீட்டில் இருந்து மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். அதில் தளர்வுகள் வர வர வெளியே சென்று வரும் ஆட்கள், குறிப்பாக மது போதைக்கு ஆட்படுபவர்கள் இதுவரை அழுத்தி அழுத்தி உள்ளே புதைத்து வைத்திருந்த விஷயத்திற்கு உயிர் கொடுத்து விடுகிறார்கள். அதனால்தான் இப்படி சின்னச் சின்ன விஷயத்திற்கெல்லாம் கொலை நடக்கிறது” என்றனர்.