தமிழகம்

ரூ.76 லட்சம் நூதனமாக திருட்டு : ஏடிஎம்மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் 2 பேர் கைது

செய்திப்பிரிவு

ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் ஈடுப்பட்ட ஊழியர்கள் 2 பேர் நூதன முறையில் ஏடிஎம்மில் நிரப்பும் பணத்தில் ரூ.76 லட்சத்தை திருடி வந்துள்ளனர். நீண்ட காலமாக நடந்த திருட்டை சமீபத்தில் கண்டறிந்த வங்கி நிர்வாக புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் ஏடிஎம்மில் பணம் நிரப்பும் பணியில் இருந்த 2 பேர் பணம் கையாடல் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்பிஐ ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை ரைட்டர்ஸ் பிஸினஸ் சர்வீசஸ் லிமிடெட் ஏற்றிருந்தது. இந்த நிறுவனத்தில் பாண்டிச்சேரி முத்துப்பிள்ளை பாளையத்தைச் சேர்ந்த அபிஜித்(42) என்பவர் பணம் நிரப்பும் பணியில் வழித்தட அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு கீழ் திண்டிவனம் தென் நெற்குணம் பகுதியைச் சேர்ந்த காளிங்கன் (28), பிரசாந்த் (28)இருவரும் பணம் நிரப்பும் ஊழியர்களாக பணியாற்றினர். இவர்கள் வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பும் போது நூதன முறையில் யாரும் சந்தேகப்படாத அளவுக்கு சிறிதளவு பணத்தை திருடியுள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு முறை பணம் நிரப்பும்போதும் பணம் திருடிய இவர்கள் இவ்வாறு கடந்த 8 மாதங்களாக ரூ 78 லட்சத்து 21 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடியுள்ளனர்.

வங்கிக்கணக்கில் வாடிக்கையாளர்கள் எடுக்கும் பணம், இருப்புக்கும் இடையே வித்யாசம் வருவதை தணிக்கைக்குழு கண்டறிந்தது. தணிக்கைக்குழுவின் விசாரணையில் வங்கி ஏடிம்மில் பணம் நிரப்பும் ஊழியர்கள் காளிங்கன், பிரசாந்த் நூதன முறையில் யாரும் சந்தேகப்படாதவண்ணம் பணத்தை திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அறிந்த இருவரும் தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து வங்கி நிர்வாகம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரிடம் அலுவலர் அபிஜித் அளித்த புகாரின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டும் காளிங்கன், பிரசாந்த் இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

இருவரும் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானவர்கள் என்றும் ஆரம்பத்தில் சிறிதளவு ஏடிஎம் பணத்தில் திருடி ஆன்லைன் ரம்மி வென்றப்பின் பணத்தை திரும்ப அங்கு வைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஆடியதாகவும், அதில் தோற்றுப்போனதால் மீண்டும் ஆடி வெல்லலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் மீண்டும் ஆடி தோற்றதால் அடிக்கடி பணம் கையாடல் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT