துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ ரூ.160-க்கு விற்கப்படுகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்த, ஆன்லைன் விற்பனையை தடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக துவரம் பருப்பு விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் தற்போது கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக கேட்டபோது, தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி.சொரூபன் கூறியதாவது:
தமிழகத்தில் துவரம் பருப்பு நுகர்வு அதிகமாக உள்ளது. இருந்தாலும், தமிழகத்தின் தேவையை வட மாநிலங்கள்தான் பூர்த்தி செய்கின்றன. வழக்கமாக ஆண்டின் இறுதியில் துவரம் பருப்பு அறுவடை நடைபெற்று, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரும். அப்போது விலையும் குறைவாக இருக்கும். இந்த ஆண்டு வட மாநிலங்களில் விளைச்சல் சற்று குறைவாக இருப்பது உண்மைதான். விலை உயர்வுக்கு அதுவும் ஒரு காரணம்.
முந்தைய மத்திய ஆட்சியில் ஆன்லைன் வர்த்தகத்தில் துவரம் பருப்பு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நரேந்திர மோடி பிரதமரான பிறகு, சத்தமில்லாமல் ஆன்லைன் வர்த்தகத்தில் துவரம் பருப்பை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பருப்பு பதுக்கப்பட்டு, தற்போது விலை உயர்ந்துள்ளது. விலையை குறைக்க தான்சானியா, கென்யா போன்ற நாடுகளில் இருந்து துவரம் பருப்பை இறக்குமதி செய்தாலும், அது இந்திய பருப்பை போன்று சுவையாக இல்லை.
சென்னையில் கடந்த ஆண்டு வட மாநில பருப்பு ரூ.90-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு பருப்பு ரூ.120-க்கு விற்கப்படுகிறது. விலை குறைக்கப்பட வேண்டும் என்றால், முதலில் ஆன்லைன் வர்த்தகத்தில் பருப்பு விற்பனையை அனுமதிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டுறவு கடையில் ரூ.107
நுகர்பொருட்களின் சந்தை விலையை கட்டுக்குள் வைக்க நாட்டிலேயே முதல்முறையாக ‘சந்தை விலை நிலைநிறுத்தும் நிதி’ ஒன்றை தமிழக அரசு உருவாக்கியது. அதற்கு ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கியது. அந்த நிதியிலிருந்து தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலமாக கடந்த மே மாதத்தில் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, குளிரூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கூட்டுறவு விற்பனை கடைகளில் இந்த பருப்பு தற்போது கிலோ ரூ.107-க்கு விற்கப்படுகிறது. தமிழக அரசின் நடவடிக்கையை பின்பற்றி மத்திய அரசு சார்பிலும் ‘சந்தை விலை நிலைநிறுத்தும் நிதி’ உருவாக்கப்பட்டு, அதற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.