பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் எனவும், சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை எனவும், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று (ஜூன் 3) கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், பல தலைவர்களும் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். கருணாநிதி குறித்து தங்கள் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, கமல்ஹாசன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கருணாநிதியை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர்" என பதிவிட்டுள்ளார்.