கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்தில் உருதுப்பள்ளி மாணவர்களின் வரலாற்று பாடத்திற்கான காணொளிகள் தயாரிக்கப்பட்டது. 
தமிழகம்

தமிழகத்திலேயே முதன்முறையாக உருதுப்பள்ளி மாணவர்களுக்காக வரலாற்று பாடத்திற்கான காணொளிகள் தயாரிப்பு

எஸ்.கே.ரமேஷ்

தமிழகத்தில் பன்மொழி பேசும் மக்கள் அதிகம் கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரியாகும். இம்மாவட்டத்தில், உருது மொழி பேசும் மாணவர்களுக்காக 42 தொடக்கப்பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகள், 4 உயர்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பிற மொழிகளில் கிடைக்கும் பாடம் சார்ந்த காணொளிக் காட்சிகள் போல் உருது மொழியில் காணொளிகள் இல்லை.

எனவே, இவர்களுக்காக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மகளிர் வலை அமைப்பினர், தமிழகத்திலேயே முதல்முறையாக கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகத்துடன் இணைந்து உருதுப் பள்ளி மாணவர்களின் வரலாற்று பாடங்களில் உள்ளவற்றை, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உருது ஆசிரியைகளைக் கொண்டு காணொளிகளாக தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணியை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக 6-ம் வகுப்பு சமூக அறிவியிலில் உள்ள வட இந்தியாவில் வேதகால பண்பாடும், தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும் என்ற பாடத்தில் உள்ள தமிழகத்தின் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் பற்றிய காணொளிகள் எடுக்கப்பட்டன. நடுகல்லின் முக்கியத்துவம் பற்றியும், நடுகற்களின் வகைகளைப் பற்றியும் அருங்காட்சியக காப்பாட்சியர் விளக்க, அதை அப்படியே உருது மொழியில் ஆசிரியைகள் கூறும்படி காணொளி எடுக்கப்பட்டது.

"நாம் தேடித்தேடி ஓடிச்சென்று கற்ற, கற்பித்தக்கல்வியை இன்று பள்ளி செல்லா நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே எளிதில் கற்க ஏதுவாக தங்கள் பெற்றோரின் செல்பேசிக்கு பாடங்களை கொண்டு சேர்த்தல் மிக எளிதாதாகும். இதை பெற்றோர்கள் மேற்பார்வையில் எளிதாக்கும் வகையில் செயல்படுத்தப்படும். யூடியூப்பில் 'KHRDT MUSEUM' என டைப் செய்தால் இக்காணொளிகளைக் காணலாம்" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT