பெண் டிஎஸ்பி தற்கொலை மற்றும் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி, சென்னை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருச்செங்கோடு பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு மற்றும் கோகுல்ராஜ் கொலை வழக்கு ஆகியவற்றை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகள் தந்த நெருக்கடியால்தான், டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் உள்ளதால், அதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பி சேவியர் பிரான் சிஸ் பெஸ்கி, சென்னை நில அப கரிப்பு தடுப்பு பிரிவுக்கு, அயல் பணிக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காவல் துறையினர் சிலர் கூறும்போது, ‘பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவுக்கு உதவியாக ஏடிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி செயல்பட்டு வந்தார். விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட சமயத்தில், அவரது தோழியான கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரிக்கு, கோகுல்ராஜ் வழக்கு சம்பந்தமாக ஏடிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி சில தகவல்களை கூறியதாகவும் காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
அவர், மேலும் சில தகவல் களை கசிய விட்டால் பிரச்சினை நேரிடும் என்பதால், ஏடிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி, திடீரென அயல் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். எனினும், ஒரு மாதத்துக்கு மட்டுமே அயல்பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்’ என்று அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி கூறும்போது, ‘சென்னை நில எடுப்பு தடுப்பு பிரிவுக்கு ஒரு மாதத்துக்கு அனுப்பப்பட்டுள்ளேன்’ என்றார்.