சிவகங்கை மாவட்ட மணல் கொள்ளை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, பாப்பாகுடி தாலுகாவில் சவுடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் வழங்கிய அனுமதியை பயன்படுத்தி, நூறு அடி ஆழம் தோண்டி மணல் அள்ளப்படுகிறது. விவசாயம் சார்ந்த மண் மேட்டை சமன் செய்வது, பள்ளத்தை மேடாக்குவது போன்ற பணிகளுக்கான அனுமதி முறைகேடாக பயன்படுத்தி அதிக ஆழத்தில் மணல் எடுத்து விற்கின்றனர்.
இதேபோல் சவுடு மண், உவரி மண் எடுப்பதற்கான அனுமதியை வைத்து முறைகேடாக ஆற்று மணல் எடுத்து விற்கின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் பலர் தனியார் நிலத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு சிவகங்கை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தில் சவுடு, உபரி மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மதுரை, சிவகங்கை உட்பட 13 மாவட்டங்களி்ல் சவுடு மண் எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
அதை மீறி சவுடு மண் எடுக்க அனுமதி கொடுக்கப்படுகிறது என்றார். பின்னர், மனு தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.