தமிழகம்

உங்களது ஒவ்வொரு முடிவும் 130 கோடி மக்களை பாதிக்கிறது: பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி பதில் கடிதம்

இ.மணிகண்டன்

உங்களது ஒவ்வொரு முடிவும் நாட்டிலுள்ள 130 கோடி மக்களையும் பாதிக்கிறது என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்து மாணிக்கம் தாகூர் எம்.பி.,யும் பிரதமருக்கு பதில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், "எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களே.. உங்களுடைய இதயபூர்வமான வாழ்த்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நாளில் மங்களமும், மகிழ்ச்சியும் வருகின்ற ஆண்டுகளில் வருமென்று கூறிய தங்களுக்கு நன்றியை மேலும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய நாட்டில் நீங்கள் அறிவித்த கரோனா ஊரடங்கு உத்தரவால் சிறு,குறு விவசாயிகள், சாதாரண குடிமக்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24-ஆம் தேதி அன்று திடீரென்று நீங்கள் எடுத்த முடிவு. உங்களது முடிவால் இன்று மக்களின் வாழ்வில் மங்களமும், மகிழ்ச்சியும் இல்லாமல்போனது. அவர்களுக்கு மிஞ்சியது எல்லாம் வாழ்வாதாரத்தை இழந்த ஏக்கம்தான். எனவே இந்த நன்னாளில் பிறந்த நாள் கொண்டாடவில்லை.

நீங்கள் திடீரென எடுத்த அந்த முடிவினால் அப்போது பாதிக்கப்பட்டோர் சில ஆயிரம் மட்டும் தான். ஆனால், இரண்டு மாதம் கழித்து பார்த்தால் இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. பலருடைய குடும்பங்களில் இடி விழுந்துள்ளது.

ஏழை மக்கள் தங்கள் கிராமத்தை நோக்கி நடைபயணம் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை எல்லாம் எப்படி மாற்றப் போகிறோம்? அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? என்ற கவலைதான் இந்த பிறந்த நாளில் வருகிறது. அதனால், பிறந்த நாளைக் கொண்டாட எண்ணம் வரவில்லை என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் 130 கோடி மக்களுடைய வழியில்லாத, குரல் இல்லாத மக்களுடைய பிரச்சினை நோக்கி இருக்க வேண்டும்.

ஆனால், நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் அவர்களை பாதிக்கிறது என்பதை மாண்புமிகு பிரதமரே மறந்துவிடாதீர்கள் என்று கூறிக்கொள்கிறேன்." இவ்வாறு அக்கடிதத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT