வரிசெலுத்த விரும்பும் மக்கள் தங்கள் வரியை செலுத்த வசதியாக மண்டலத்திற்கு ஒரு வரிவசூல் மையத்தை மாநகராட்சி திறந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி, கடை வாடகை, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் வாயிலாக ஆண்டுதோறும் சராசரியாக ரூ.200 கோடிக்கு மேல் நிரந்தர வருவாய் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு வரி மற்றும் வரி இல்லா வருவாய் இனங்கள் மூலம் மாநகராட்சிக்கு ரூ.207 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், ரூ.110 கோடி மட்டும் சொத்து வரியாக கிடைக்க வேண்டிய வருவாய். ஆனால், இதில் பல்வேறு வழக்குகள் நிலுவை காரணமாக ரூ.97 கோடி மட்டுமே வசூலாகும் நிலை இருந்தது.
அதன்அடிப்படையில் கடந்த 2019-2020நிதியாண்டில் மாநகராட்சி வருவாய் இலக்கில் 85 சதவீதம் வரிவசூல் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால், 75 சதவீதம் மட்டுமே வசூலானது. ‘கரோனா’ ஊரடங்கு வராமல் இருந்திருந்தால் கூடுதலாக மேலும் 5 சதவீதம் வரிவசூலாகி இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சூழலில் பல்வேறு ஆவண பராமரிப்பு மற்றும் அரசுத் திட்டங்களில் விண்ணப்பிப்பதற்காக, பயன்பெறுவதற்காக பொதுமக்களுக்கு வரி ரசீது தேவைப்படுகிறது.
அதனால், அவர்கள் வரி செலுத்த தயாராக இருந்தும், ‘கரோனா’ ஊரடங்கால் வரிவசூல் மையம் மூடப்பட்டதால் அவர்களால் வரிசெலுத்த முடியவில்லை.
இந்நிலையில் மதுரை மாநகராட்சியில் தற்போது வரி செலுத்த விருப்பப்படும் பொதுமக்கள் வசதிக்காக மண்டலத்திற்கு ஒரு வரிவசூல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகனிடம் கேட்டபோது, ‘‘தற்போது மண்டலத்திற்கு ஒரு வரிவசூல் மையம் திறக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து வரிவசூல் மையங்களையும் திறக்க ஏற்பாடு செய்துள்ளோம். இப்போதுள்ள சூழலில் யாரையும் வரிசெலுத்த கட்டாயப்படுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள், அந்த வரிவசூல் மையங்களில் தங்கள் வரியை செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது, ’’ என்றார்.