துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

'கிரண்பேடி 50,000 புகார்களுக்கு தீர்வு கண்டதாகக் கூறுவது அப்பட்டமான பொய்': புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி  

அ.முன்னடியான்

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளதாகக் கூறுவது அப்பட்டமான பொய் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று (ஜூன் 2) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் மிகக் குறைவாக இருந்த கரோனா தொற்று தற்போது படிப்படியாக உயர்ந்து வருகிறது. வெளிநாடு மற்றும் சென்னையிலிருந்து வருபவர்கள் கரோனா தொற்றோடு வருவதுதான் இதற்கு காரணம்.

காய்கறி மார்க்கெட்டை மாற்றுவது சம்பந்தமாக ஆட்சியர், நகராட்சி அதிகாரிகளை அழைத்துப் பேசி, பழைய இடத்துக்கு செல்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். அது நாளைய தினம் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால், மிக கடுமையான கட்டுப்பாடுகளோடு புதுச்சேரி பெரிய மார்க்கெட்டுக்கு காய்கறி மார்க்கெட் வரும்.

கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்துதான் தமிழகம் முழுவதும் கரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நிலை புதுச்சேரிக்கு வரக்கூடாது. காய்கறி மொத்த வியாபாரிகள் விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் கடைகள் மூடப்படும். கடைகள் எல்லாம் இரவு 8 மணி வரை திறந்திருக்க வேண்டும்.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை யாரும் வெளியில் நடமாடக் கூடாது என ஊரடங்கு உத்தரவில் தெளிவாக கூறியுள்ளோம். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அலுவலகத்துக்கு இதுவரை 50 ஆயிரம் புகார்கள் வந்திருப்பதாகவும், அந்த புகார்களை எல்லாம் அவர் தீர்த்துவிட்டதாகவும் கூறியிருப்பதை இன்று நான் படித்தேன். அதனை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது.

ஆளுநர் அலுவலகம் புகார் பெறுகிற அலுவலகம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோடு ஆளுநர் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநருக்கு ஒரு புகார் வருகிறது என்றால், அதனை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு, முதல்வர் மூலமாக அனுப்ப வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அதனை பரிசீலனை செய்து விசாரித்து நடவடிக்கை எடுப்பார். ஆளுநர் வேலை புகார்களை விசாரிப்பதல்ல.

அவர் ஒரு விசாரணை அதிகாரியும் அல்ல. அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் நியமிக்கப்பட்டவர். ஆளுநருக்கு நேரடியாக எந்தப் புகாரையும் விசாரிக்க அதிகாரம் கிடையாது.

இந்திய ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது, அந்த ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கின்ற வகையில் ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அவர் தினமும் மக்களைத் தன்னுடைய அலுவலகத்துக்கு வரச் சொல்லி புகார்களை பெற்று, அதுசம்பந்தமாக விசாரணை செய்கிறேன் என்று மக்கள் மத்தியில் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். அவர் எந்தெந்த புகார்களை விசாரித்தார். அவர் விசாரிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. எந்த அதிகாரி விசாரித்தார். அதன் இறுதி முடிவு என்ன? என்று மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

50 ஆயிரம் புகார்களை தீர்த்து வைத்தேன் என ஆளுநர் கிரண்பேடி கூறுவது அப்பட்டமான பொய். உண்மைக்கு புறம்பானது. மாநில அரசு சார்பில் என்னிடமும், அமைச்சர்களிடம் புகார்கள் வருகின்றன. அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம். ஆனால், ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் புகார்களை பெறுவதற்கோ, அதன் மீது விசாரணை நடத்துவதற்கோ சட்டப்படி அதிகாரம் இல்லாதபோது, தானே 50 ஆயிரம் புகார்களை விசாரித்து தீர்வு கண்டேன் எனக் கூறுவதை யாரும் நம்ப முடியாது, ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

ஆளுநர் கிரண்பேடி கடந்த 4 ஆண்டுகளாக ஜனநாயகத்தை மதிப்பது கிடையாது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிப்பது கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மதிப்பது கிடையாது, மக்களை மதிப்பது கிடையாது. தன்னிச்சையாக தான் நினைத்ததை செய்ய வேண்டும் என நினைக்கிறார். விதிமுறைகளை பற்றி கவலைபடுவது கிடையாது.

ஆளுநர் கிரண்பேடி தனக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்லிக்கொண்டு 50 ஆயிரம் புகார்களை விசாரித்தேன் என்று கூறுவது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. புதுச்சேரியில் 4 ஆண்டு காலமாக மக்கள் நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காவும் கிரண்பேடி ஒன்றுமே செய்யவில்லை. மக்கள் நலத்திட்டங்களை தடுத்து நிறுத்தியதை தவிர கிரண்பேடியின் சாதனை எதுவும் இல்லை"

இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT