கோவை மாவட்டத்தில் பொதுமுடக்கம் வெகுவாகத் தளர்த்தப்பட்டிருந்தாலும், அம்மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் சுற்றுலாவுக்குத் தடை தொடர்வதால் அப்பகுதி வியாபாரிகளும் சுற்றுலா வாகன ஓட்டுநர்களும் வருவாயின்றி சிரமப்படும் நிலை தொடர்கிறது.
வால்பாறையில் கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்கள் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் களைகட்டும். ஆண்டில் அதிக வருவாய் கிடைப்பதும் இந்த சீசனில்தான். ஆனால், கரோனா தொற்று அச்சத்தால் பொதுமுடக்கத்திற்கு முன்னதாகவே வால்பாறை சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுவிட்டன. கடந்த 70 நாட்களுக்கு மேலாகச் சுற்றுலாப் பயணிகள் இன்றி அவை வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இதனால், சுற்றுலா வருவாயை நம்பித் தொழில் செய்துவந்த பலர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். சிறுதொழில் செய்பவர்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியிருக்கும் நிலையில், தவணைகளைச் செலுத்துமாறு அந்நிறுவனங்கள் வலியுறுத்துவதாகப் புகார்களும் எழுந்திருக்கின்றன.
இந்தச் சூழலில், ஜூன் முதல் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அரசு அறிவிக்கும் என்றும் அதில் ஒன்றாகச் சுற்றுலாவும் இருக்கும் என்றும் இங்குள்ள வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டிகள் நம்பியிருந்தனர். ஆனால், தற்போது சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை தொடர்வதாக அரசு அறிவித்திருப்பது அவர்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.
இதுகுறித்து வால்பாறையில் உள்ள கடை வியாபாரிகள், ஆட்டோ மற்றும் சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
“சுற்றுலாப் பயணிகளை நம்பித் தொழில் செய்யும் நாங்கள் வருவாயின்றி, குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வாங்கவே சிரமப்படுகிறோம். பொதுமுடக்கத்தின் தொடக்கத்தில் சமூக ஆர்வலர்கள் செய்த உதவியை இப்போதும் தொடர்ந்து எதிர்பார்ப்பதும் சாத்தியமல்ல. ஏனென்றால் உதவி செய்தவர்களும் சுற்றுலாவை நம்பியே தொழில் செய்து வருபவர்கள். அவர்களுக்கும் பாதிப்பு உள்ளது. பலர் தனியார் நிதிநிறுவனங்களில் கடன் பெற்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்குச் சிறிய அளவிலான கடன் உதவிகளைச் செய்ய அரசு முன்வரவேண்டும்.
முதலில், கோவை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள், வால்பாறை சென்றுவர அனுமதிக்கப்பட வேண்டும். பின்னர் பிற மண்டலத்திற்குட்பட்ட மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கலாம். இவ்வாறு அரசு உத்தரவிட்டால் நாங்கள் படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்ப ஏதுவாக இருக்கும்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.