தமிழகம்

கருணாநிதி குறித்து வாட்ஸ் அப்பில் விமர்சித்த விவகாரம்: நெல்லையில் திமுக, அதிமுக பரஸ்பரம் புகார் மனு

அ.அருள்தாசன்

முன்னாள் முதல்வர் கருணாநிதியை குறித்து வாட்ஸ்அப்பில் விமர்சித்த விவகாரம் தொடர்பாக அதிமுகவும், திமுகவும் பரஸ்பரம் புகார் தெரிவித்து திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுக்களை அளித்தனர்.

அப்போது அங்கு பரபரப்பு நிலவியது.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சனம் செய்து கடந்த 31-ம் தேதி வாட்ஸ்அப் குழுக்களில் பதிவுகள் வந்ததை அடுத்து திமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் இந்த விமர்சனங்களை பதிவிட்ட அதிமுக நிர்வாகி மற்றும் பதிவை தயார் செய்தவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் ஞானதிரவியம், ராதாபுரம் ஒன்றிய திமுக செயலாளர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இதேநேரத்தில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சட்டவிரோதமாக காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஞானதிரவியம் எம்.பி. உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் பி. பழனிசங்கர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளும் மனு அளித்தனர். ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT