சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் டெண்டர் விடாமல் ரூ.2 கோடிக்கு பணி நடந்ததைக் கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
திருப்புவனம் பேரூராட்சியில் கடந்த 6 மாதங்களில் விதிமுறைகளை மீறி டெண்டர் விடாமல் தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன.
மட்டை ஊருணியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி, 10 இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட ரூ.2 கோடி மதிப்பிலான பணிகள் டெண்டர் விடாமல் விதிமுறை மீறி நடந்துள்ளன.
மேலும் உள்ளாட்சி விதிமுறைகளுக்கு எதிராக வாரச்சந்தைக்கு குத்தகை எடுக்கப்பட்ட இடத்தில் விதிமுறையை மீறி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருப்புவனம் ஊத்துக்கால்வாய் பேரூராட்சி மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சட்டப்பாதுகாப்பு குழு சார்பில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை இல்லாதநிலையில் நேற்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தண்டியப்பன் முன்னிலை வகித்தார்.
திமுக ஒன்றியச் செயலாளர் கடப்பசாமி, நகரச் செயலாளர் நாகூர்கனி, காங்கிரஸ் சார்பில் செந்தில்குமார், கருப்புசாமி, ராமலிங்கம், மதிமுக சேகர், முத்திருளு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.