தமிழகம்

திருவேங்கடம் பகுதியில் காணப்படும் வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்தாது: வேளாண் இணை இயக்குநர் தகவல்

த.அசோக் குமார்

திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள் உள்ளூர் பகுதிகளில் காணப்படும் சாதாரண வெட்டுக்கிளிகள்தான். இவை பயிர்களை பெரிய அளவில் சேதப்படுத்தாது என வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள கலிங்கப்பட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

மகசூல் அளிக்கும் நிலையில் உள்ள பருத்திச் செடிகளை ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் தாக்கி சேதப்படுத்துவதாக விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேளாண்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கஜேந்திரபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் அப்பகுதிக்குச் சென்று இன்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து வேளாண்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) கஜேந்திர பாண்டியன் கூறும்போது, “திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் காணப்படும் வெட்டுக்கிளிகள் உள்ளூர் பகுதிகளில் காணப்படும் சாதாரண வெட்டுக்கிளிகள்தான். இவை பயிர்களை பெரிய அளவில் சேதப்படுத்தாது.

பயிர்களை சேதப்படுத்தும் பூச்சிகளை வேட்டையாடி உண்ணக்கூடியவை. இந்த வகை வெட்டுக்கிளிகளால் பயிர்களுக்கு தீமை செய்யும் பூச்சி வகைகளுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். எனவே, விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. இதுகுறித்து விவசாயிகளுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் கோடிக்கணக்கில் ஒன்றாக கூடி வரும். அந்த வகை வெட்டுக்கிளிகளால்தான் பாதிப்பு ஏற்படும். பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் இதுவரை வரவில்லை. இனி வரவும் வாய்ப்பு இல்லை. எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.

SCROLL FOR NEXT