தமிழகம்

கரோனா பேரிடர் நேரத்திலும் விவசாயிகள் குறித்து மத்திய அரசுக்கு கவலையில்லையா?- 50 சதவீதத்துக்கும் குறைவான ஆதார விலை: முத்தரசன் வேதனை 

செய்திப்பிரிவு

ரூ.5000 குவிண்டாலுக்கு ஆதார விலை கேட்கும் நேரத்தில் ரூ.1888 என அறிவிக்கும் மத்திய அரசு எந்த உலகத்தில் வாழ்கிறது, கரோனா பேரிடர் நேரத்திலும் விவசாயிகள் குறித்து கவலையில்லையா என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரீப் சாகுபடி கால விவசாய உற்பத்தி பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி நெல்லுக்கான குறைந்த பட்ச ஆதார விலையாக சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 1868/= என்றும் ‘ஏ’ கிரேடு நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 1888/= என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு மூலம் உற்பத்தி செலவுகளுடன் கூடுதலாக 50 முதல் 83 சதவீதம் வரை விவசாயிகள் லாபம் பெறுவார்கள் என்று அறிவித்திருப்பது கற்பனை உலகில் வாழும் கணிதப் புலிகள் வகுத்த இந்த ‘ஏட்டுச் சுரைக்காய்’ கணக்காகும் .

நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 5000/= ம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை எந்த வகையிலும் ஏற்க தக்கதல்ல.

உற்பத்தி செய்யும் விளை பொருள்களுக்கு நியாய விலை கிடைக்காததால் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் துயரம் தொடர்கிறது.

இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ளும் விவசாயத் தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் கொள்கை வகுத்து செயல்படுவதில்லை. அண்மையில் கொரானா நோய் பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில், உற்பத்தி செய்த காய்கறிகள், பழவகைகள் உள்ளிட்டவைகளை சந்தைக்கு கொண்டு செல்ல இயலாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இவைகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை.

உலகம் ஒப்புக்கொண்ட வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் தலைமையிலான வேளாண் ஆணையம் விவசாயிகள் உற்பத்தி பொருள்களுக்கு உற்பத்தி செலவுடன் சேர்த்து 50 சதவீதம் கூடுதலாக கணக்கிட்டு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை பாஜக நிறைவேற்றும் என தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை.

பாஜக மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலைகள் விவசாயிகள் எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. விவசாயிகள் ஆண்டு வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாக உறுதியளித்த பாஜக மத்திய அரசு வழக்கம் போல் ஏமாற்றி விட்டது.

விவசாயிகள் விரோதக் கொள்கைகளை கைவிட்டு, குறைந்த பட்ச ஆதார விலையை திருத்தி, உயர்த்தி அறிவிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT