தமிழகம்

மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்து ஜூன் 5-ல் உண்ணாவிரதப் போராட்டம்: பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

கரு.முத்து

மத்திய அரசின் புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியிருக்கும் நிலையில், அதைக் கண்டித்து ஜூன் 5-ல் தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் வீடுகள், விளை நிலங்கள், சங்க அலுவலகங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள் என்று பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் காணொலி வழியே இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"இலவச மின்சாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு 2020 புதிய மின்சாரச் சீர்திருத்த சட்ட வரைவு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விவசாயிகள் இலவச மின்சாரத்திற்கான கட்டணத்தை யார் செலுத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணத்தைத் தானே செலுத்தி விட்டு தமிழக அரசிடம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் தமிழக அரசு செலுத்த வேண்டும். அதற்கான ஒப்புதலைத்தான் கேட்டுள்ளோமே தவிர இலவச மின்சாரத்தை ரத்து செய்யவில்லை என்று அவர் விளக்கமளிப்பது போராடும் விவசாயிகளை கொச்சைப் படுத்துவதாகும்.

இதனைக் கண்டித்தும், இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தியும், காவிரி டெல்டாவை அழிக்கும் நோக்கோடு சட்டத்திற்குப் புறம்பாக செயல்படுத்தப்படும் மேட்டூர் அணை - சரபங்கா உபரி நீர்த் திட்டத்தைக் கைவிடக் கோரியும் ஜூன் 5-ம் தேதி தஞ்சாவூரில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியிருந்தோம்.

அதற்கு 144 தடையுத்தரவு தொடர்வதைக் காரணம் காட்டி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டதால் அதே தினத்தில் தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்கள் வீடுகள் அல்லது விளை நிலங்கள் மற்றும் சங்க அலுவலகங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT