சென்னை ஐஐடி பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு தடை கோரிய மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் வினோத் குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
ஆந்திரப் பிரதேசத்தில் என்.ஐ.டியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறேன். சென்னை ஐஐடியில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 23.10.2019-ல் அறிவிப்பு வெளியானது.
நான் வேதியியல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். நான் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவன். பல்வேறு கட்டத் தேர்வுக்கு பிறகு 25.2.2020-ல் நேர்முகத் தேர்வுக்கு நான் உட்பட 4 பேர் அழைக்கப்பட்டோம். அதன் பிறகு எந்த பதிலும் வரவில்லை.
உதவிப் பேராசிரியர், பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடும் போது இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடஓதுக்கீடு கொள்கை அடிப்படையில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்குரிய இடஒதுக்கீடு விவரம் தெளிவாக அறிவிக்கப்படவில்லை.
எனவே பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை வெளியிடும் முன்பு இடஒதுக்கீடு கொள்கை அடிப்படையில் பணிக்குரிய இடஒதுக்கீடு விவரம் மற்றும் தகுதிகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
அதுவரை 23.10.2019-ல் வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை அடிப்படையில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜெ.நிஷாபானு விசாரித்து, மனு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், சென்னை ஐஐடி இயக்குனர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.