ராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 60.
இரு தினங்களுக்கு முன்னதாக காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர் தாமாகவே முன்வந்து கரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது.
இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுகாதாரத் துறையினர் இன்று காலை அந்த மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு அறிகுறி உள்ளதா என ஆய்வு செய்தனர்.
அங்கு பணியாற்றும் 38 பணியாளர்களில் அறிகுறி தென்படும் 8 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையைச் சுற்றியுள்ள ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவரின் மனைவி மற்றும் அவரது மகள் மருத்துவர் ஆகியோருக்கு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். மருத்துவரின் மகளும் அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.