மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் 4 நாட்களுக்குத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மே 16-ம் தேதி புதுச்சேரி உள்ளிட்ட 8 யூனியன் பிரதேசங்களில் இயங்கும் மின்பகிர்மான கழகம் மற்றும் மின்துறைகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்தது முதல் புதுச்சேரி மின்துறையில் உள்ள பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய எதிர்ப்பு போராட்டக்குழுவை அமைத்து கடந்த 21-ம் தேதி முதல் எதிர்த்து போராடி வருகின்றனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம், மனு அளித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 2) முதல் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக மின்துறை பணிகள் முடங்கியுள்ளன.
வம்பாக்கீரப்பாளையத்திலுள்ள தலைமை அலுவலகம் முன்பு நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள இப்போராட்டக்குழுத் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், "மின்துறை தனியார் மயமானால் மின் கட்டணம் அதிகமாக உயரும், விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும், எங்களது அரசுப்பணியும் கேள்விக்குறியாகும். எனவே, மின்துறை தனியார் மயமாக்கும் முயற்சியை கண்டித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.
போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று முதல் தொடர்ந்து நான்கு தினங்களுக்கு தொடர் உண்ணாவிரதம் இருக்கிறோம். புதுச்சேரி மின்துறையில் உள்ள டிவிஷன்களை நான்காக பிரித்து, அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளோம்.
புதுச்சேரி அரசு தனியார் மயமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துவிட்டது. ஆனாலும் குறைந்தபட்சம் அமைச்சரவையில் முடிவு எடுத்து ஆளுநர் மூலம் மத்திய அரசுக்கு அனுப்பும் வரை எங்களது போராட்டம் தொடரும். எங்கள் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் விவசாயிகளையும், பொதுமக்களையும் பங்கேற்கச் செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றோம்" என்று தெரிவித்தார்.
இதனிடையே மின்துறையினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், மின்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.