செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல, என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை, தரமணியில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று தன் ட்விட்டர் பக்கத்தில், "ஆர்.சந்திரசேகரன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றி" எனபதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூன் 2) தன் ட்விட்டர் பக்கத்தில், "செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக உதவிப் பேராசிரியர் நிலையிலுள்ள ஒருவர் அயல்பணி முறையில் நியமிக்கப்பட்டிருப்பது போதுமானது அல்ல. இது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் தமிழாராய்ச்சியை ஊக்குவிக்க எந்த வகையிலும் உதவாது!
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்திற்கு இணையான அமைப்பு ஆகும். அதன் இயக்குநராக தமிழாராய்ச்சியில் அனுபவம் மிக்க தமிழறிஞர்களில் ஒருவரை நியமிப்பது தான் பொருத்தமாக இருக்கும். தற்போதைய நியமனம் தமிழாய்வு நிறுவனத்தை மேலும் முடக்குவதற்கு வழி வகுக்கும்" என பதிவிட்டுள்ளார்.