கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7-வது கட்டமாக ஓசூர் வட்டத்தில் பணிபுரிந்து வந்த 1718 பேரும் ஓசூரில் இருந்து சிறப்பு ரயில் மூலமாக அவர்களின் சொந்த மாநிலமான அசாமுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்றது.
அசாம் சென்ற ஒரு நபருக்குப் பயணச்சீட்டு தலா ரூ.1,055 வீதம் 1718 பேருக்கும் மொத்தம் ரூ.18 லட்சத்து 12 ஆயிரத்து 490 மதிப்பிலான பயணச் சீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு பேரிடர் மேலாண்மை நிதியின் மூலம் செலுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
முன்னதாக அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தெர்மல் ஸ்கேனர் மூலமாக மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்பு ரயிலில் செல்வதற்கான பாஸ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கலந்து கொண்டு அனைவருக்கும் மூன்று வேளை உணவு மற்றும் குடிநீர் பாட்டில், முகkகவசம் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழியனுப்பி வைத்தார். இதுவரை உத்தரபிரதேசம், ஒடிசா, பிஹார், அஸ்ஸாம் ஆகிய வடமாநிலங்களுக்கு ஓசூரிலிருந்து சிறப்பு ரயில் மூலமாக மொத்தம் 11325 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், வட்டாட்சியர்கள் வெங்கடேசன், ராமசந்திரன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ரயில்வே மற்றும் ஓசூர் நகரக் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.