நாடெங்கும் தன்னார்வலர்கள் சார்பில் ரத்ததான முகாம்களை நடத்த அரசு சிறப்பு அனுமதி தரவேண்டும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.
கும்பகோணம் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து இவர் நடத்திய ரத்ததான முகாமில் 28 பேர் ரத்த தானம் செய்தனர். அதைத் தொடர்ந்து 'இந்து தமிழ் திசை' இணையத்திடம் பேசிய திருவடிக்குடில் சுவாமிகள் , “இந்த முகாமில் 28 யூனிட் ரத்தம் கிடைத்ததும் ரத்த வங்கி ஊழியர்கள் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. ஏனெனில் ரத்தத்துக்கு இப்போது அந்தளவுக்குத் தேவை இருக்கிறது. ஆனால், அதிகாரிகள் அதை உணர்ந்ததாகத் தெரியவில்லை. நாட்டில் நடக்கும் மற்ற நிகழ்வுகளான இறப்பு, திருமணம் போலவே ரத்த தான முகாம்களையும் அரசாங்கம் கருதுகிறது. அதனால் ஏகப்பட்ட கெடுபிடிகளைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ரத்த வங்கிகளில் குறைந்தபட்ச ரத்தம்கூட இருப்பு இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. ரத்தம் கிடைக்காமல் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததாகக்கூட செய்திகள் வந்தன. தன்னார்வலர்கள் ரத்தம் தரத் தயாராக இருக்கின்றனர். ஆனால், காவல்துறை அதற்கு அனுமதி அளிப்பதில்லை. உதாரணத்திற்கு, நாங்கள் இந்த முகாமை நடத்த முன்வந்தபோது நான்கு பேருக்கும் மேல் கூடக்கூடாது என்று எனக்குத் தடை விதித்தனர். மீறினால் கைது செய்வோம் என்று எச்சரித்தனர்.
இது ஒன்றும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் அல்லவே. மற்றவர்கள் உயிரைக் காக்கும் இந்த செயலுக்கு ஏன் அரசு இவ்வளவு தூரம் கெடுபிடி காட்டவேண்டும்? இந்த கரோனா காலத்தில் முகக்கவசம் வழங்கல், அன்னதானம், தேவையான அத்தியாவசிய பொருட்கள் தானம் என்று ஒருபக்கம் நடந்து கொண்டேயிருக்கிறது. அதைப் போலத்தானே ரத்த தானமும்.
ரத்தத்துக்குத் தேவை அதிகம் இருக்கிறது. கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு 69 நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஏராளமான நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் சிகிச்சைக்குக் காத்திருக்கிறார்கள். திருவிழாக்கள் நடத்தக் கூடாது, கோயில்கள் திறக்கக் கூடாது என்பதுபோல ரத்ததான முகாம்கள் நடத்தக்கூடாது என்று சொல்வது சரியில்லை.
இது மிகப்பெரிய தவறு. அதனால் இந்த தவறை சரிசெய்யும் விதமாக ஒவ்வொரு பகுதியிலும் ரத்ததான முகாம்களை அரசாங்கமே தன்னார்வலர்களுடன் இணைந்து நடத்த வேண்டும். கொடையாளிகள் தடையின்றி ரத்தம் அளித்திட முகாம்களுக்குச் சிறப்பு அனுமதி அளித்திட வேண்டும்” என்றார் திருவடிக்குடில் சுவாமிகள்.