தமிழகம்

புதுச்சேரி பொது சுகாதாரத் துறைக்கு வந்த தடுப்பு நிதி ரூ.3.8 கோடியில் 15 சதவீதம் மட்டுமே செலவு- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்

செய்திப்பிரிவு

மத்திய அரசு பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதார நிறுவனம் புதுச்சேரி அரசு பொது சுகாதார துறைக்கு கரோனா நோய் தடுப்பு நிதியாக அளித்த ரூ.3.8 கோடியில் 15 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ள விவரம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது.

மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி அரசு பெற்ற கரோனா தடுப்பு நிதி, அதில் செலவு செய்துள்ள தொகை குறித்து ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி,தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். அதில் கிடைத்த தகவல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயண சாமியிடம் மனு ஒன்றை அவர் அளித்துள்ளார்.

மனு தொடர்பாக அவர் கூறியதாவது: கரோனா தொற்று தடுப்பு நிதியாக மத்திய பொது சுகாதார நிறுவனம் ரூ.3.8 கோடிநிதியை புதுச்சேரிக்கு அளித்துள்ளது. இதில், கடந்த மே 21-ம்தேதி வரை மருத்துவ பரிசோதனைக்கு ரூ.56.35 லட்சமும், போக்குவரத்துக்கு ரூ.8 ஆயிரமும், சுகாதாரவிழிப்புணர்வு பிரச்சாரத்துக்கு ரூ.1.11 லட்சமும் என மொத்தம் ரூ.57.55 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இது மொத்தமாக வந்த தொகையில் 15 சதவீதம்தான்.

கரோனா தொற்று தடுப்பு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. பாதுகாப்பு சாதனங்கள் இல்லை என சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின்றன. இந்தச் சூழலில், மத்திய அரசு அளித் துள்ள நிதியை புதுச்சேரி சுகாதாரத் துறை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

கூடுதலாக ரத்த பரிசோதனை சாதனங்கள், மருத்துவர்களுக்கு நோய் பாதுகாப்பு கவசம், நோயாளிகளுக்கு அடிப்படை வசதி செய்ய இந்த நிதியை முழு மையாக செலவிட நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் மற்றும் முதல்வரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.

SCROLL FOR NEXT