தமிழகம்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.9000 நிவாரணம் வழங்கப்படுமா?- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.9 ஆயிரம் நிவாரண நிதி வழங்கக்கோரிய மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பி.பிரியா உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 14.07 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளனர். 15-க்கும் மேற்பட்ட அமைப்புசாரா உள்ளன. கட்டுமானத் தொழிலில் மட்டும் 2 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

கரோனா ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர் வேலையிழந்துள்ளனர். அரசு ரூ.ஆயிரம் நிவாரணம் நிதி அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி மூன்று வேளைக்கும் போதுமானது அல்ல.

ஊரடங்கால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணம் வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.

மத்திய, மாநில அரசுகளின் கரோன நிவாரண நிதிக்கு பெரும்பாலன நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியுள்ளன. அந்த நிதியை அமைப்புசாரா தொழிலாளர்களின் நிவாரணத்துக்கு பயன்படுத்தலாம். தற்போது 33 சதவீத தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கபப்ட்டுள்ளது.

அதிலும் 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே வேலைக்கு வர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பது உறுதியல்ல.

சமீபத்தில் மத்திய அரசு பல்வேறு துறையினருக்கு ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் அறிவித்தது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எதும் அறிவிக்கப்படவில்லை.

எனவே தற்போதைய விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் நிவாரணத்தை ரூ.ஆயிரத்தில் ரூ.9 ஆயிரமாக உயர்த்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்து மனு தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலர் மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT