தமிழகம்

கிருமி நாசினி தெளிப்பதுபோல் ஏடிஎம்மில் ரூ.8.6 லட்சம் திருட்டு: வீடு கட்ட திருடிய வங்கி ஊழியர் கைது

செய்திப்பிரிவு

கிருமி நாசினி தெளிப்பது போல் தான் பணியாற்றிய வங்கியின் ஏடிஎம்மிலேயே மெஷினை திறந்து ரூ.8.6 லட்சத்தை திருடிச் சென்ற வங்கி ஊழியர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். வீடு கட்ட பணம் தேவைப்பட்டதால் திருடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் மெர்கன்டைல் வங்கியின் கிளை உள்ளது. இங்கு வாடிக்கையாளர்களுக்காக வங்கியின் கிளைக்கு வெளியில் ஏடிஎம் மெஷின் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை இங்கு வந்த நபர் ஒருவர் மெஷினை கிருமி நாசினிக்கொண்டு சுத்தம் செய்வது போல் மெஷினை சாவி போட்டு திறந்து பணத்தை திருடிச் சென்றார்.

இதைப்பார்த்த சிலர் கொடுத்த தகவலின் பேரில் வங்கி ஊழியர்கள் மதுரவாயல் போலீஸாரிடம் புகார் அளித்தனர். சமபவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கு மூன்று விஷயங்கள் உறுத்தலாக இருந்தது. முதலாவது விஷயம் பணத்தை திருடிய நபர் ஏடிஎம் மெஷினை உடைக்காமல் சாவி போட்டு திறந்துள்ளார். ஏடிஎம் மெஷினை வங்கி ஊழியர்களால் மட்டுமே திறக்க முடியும்.

இரண்டாவது ஏடிஎம் மெஷினின் பாஸ்வர்ட் நம்பர் வங்கி ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும். மூன்றாவது ஏடிஎம் மெஷினில் 33 லட்ச ரூபாய் இருந்துள்ளது அதில் 8.6 லட்சத்தை மட்டுமே திருடிச் சென்றுள்ளார். அப்படியானால் திருடிய நபர் வங்கி சம்பந்தப்பட்ட நபர், சாவி, பாஸ்வார்டு உள்ளிட்ட விபரங்களை அறிந்தவர், மொத்த பணத்தையும் திருடாததால் முதல் தடவை திருடும் நபர் என முடிவுக்கு வந்தனர்.

பின்னர் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது அதில் பதிவாகியிருந்த உருவத்தை பார்த்த வங்கி ஊழியர்கள் இவர் எங்கள் வங்கியில் பணியாற்றி போன வாரம் அம்பத்தூர் கிளைக்கு மாற்றப்பட்ட சிவாநந்தன் போல் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். உடனடியாக தனிப்படை போலீஸார் அம்பத்தூர் கிளைக்கு விரைந்தனர்.

அங்கு சிவானந்தம் எதுவுமே தெரியாததுபோல் பணியில் இருக்க சிவானந்தத்தை போலீஸார் வெளியில் அழைத்து வந்து விசாரித்த அடுத்தக்கணமே உண்மையை ஒப்புக்கொண்டார். அடையாளம் தெரியாமல் இருக்க முடிவெட்டிக்கொண்டு வங்கி வேலைக்கு வந்துள்ளார் சிவானந்தம்.

போலீஸார் அவரை அழைத்துச் சென்று வீட்டில் வைத்திருந்த ஏடிஎம்மில் திருடிய ரூ. 8,60,000 பணத்தை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சொந்த ஊரில் வீடு கட்டுவதாகவும். அதற்கு ரூ.10 லட்சம் லோன் வாங்கியுள்ளதாகவும் பணத்தேவைக்காக திருடியதாகவும் தெரிவித்துள்ளார். திருடத்தெரியாதவன் தலையாரி வீட்டில் ஒளிந்தது போல் தான் பணியாற்றிய வங்கியின் ஏடிஎம்மிலேயே திருடி சிக்கியுள்ளார்.

வாரந்தோறும் ஏடிஎம்மின் ரகசிய எண்ணை வங்கி ஊழியர்கள் மாற்ற வேண்டும்.அதை மாற்றாதது சிவானந்தத்து வசதியாகி போனது. சிவானந்தத்துக்கு 40 ஆயிரத்துக்கு மேல் சம்பளம். அவரது மனைவி தலைமைச் செயலகத்தில் பெரிய பணியில் உள்ளார். இந்நிலையில் மேலும் வசதியை பெருக்க இவ்வாறு திருடி சிக்கியுள்ளார் சிவானந்தம்.

SCROLL FOR NEXT