திருநெல்வேலி மாவட்டத்தில் 171 அரசுப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் இன்று இயக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் இயக்கப்பட்டன.
5-ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்டத்தில் 84 நகர பேருந்துகள், 87 புறநகர் பேருந்துகள் என்று மொத்தம் 171 பேருந்துகள் இயக்கப்பட்டன. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம், பொருட்காட்சி திடலில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இப்பேருந்துகள் இயக்கப்பட்டன.
புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என்று பரிசோதனை செய்யும் போக்குவரத்து அதிகாரி
இவற்றில் பயணம் செய்ய வந்தவர்கள் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்தபின் பேருந்துகளுக்குள் ஏற அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. பேருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.
60 நாட்களுக்குப்பின் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் போதுமான பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்யவரவில்லை. இதனால் பல பேருந்துகள் பேருந்து நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.
தூத்துக்குடியில் 151 பேருந்துகள்..
தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர், கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், உடன்குடி, ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
அதுபோல தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பேருந்துகளில் மட்டும் பயணிகள் ஓரளவுக்கு சென்றனர். மற்ற அனைத்து பேருந்துகளிலும், குறிப்பாக நகர பேருந்துகளில் மிக குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்தனர்.
பயணிகள் கைகளை சுத்தம் செய்ய பேருந்து நிலையத்தில் சானிடைசர், சோப்பு திரவம் போன்றவை வைக்கப்பட்டிருந்தன. முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்துகளில் ஏற்றப்பட்டனர். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே பணிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்துகள் ஓடத் தொடங்கியதால் தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் செயல்பட்ட காய்கறி சந்தை, புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இதேபோல் மற்ற ஊர்களிலும் பேருந்து நிலையங்களில் செயல்பட்ட சந்தைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன.
-அ.அருள்தாசன் / ரெ.ஜாய்சன்