தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில் மூலம் 875 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று பிஹார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வந்த வெளிமாநில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தொடர்ந்து, அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடியில் இருந்து பீகார் மாநிலம் பாபுதாம் மோத்தாரி ரயில் நிலையத்துக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இந்த ரயில் பாபுதாம் மோத்தாரி ரயில் நிலையத்தை வரும் 4-ம் தேதி காலை 9.5 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயிலில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 538 பிஹார் மாநிலத் தொழிலாளர்களும், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து 337 பிஹார் மாநில தொழிலாளர்களும் பயணம் செய்கின்றனர்.
அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் மருத்துவப் பரிசோதனைகளை செய்தனர். மேலும், அவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர் போன்றவற்றை அதிகாரிகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.