தொழில் நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கும் ஆள் பற்றாக்குறையைச் சரி செய்ய, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களுக்குத் தென் மாவட்டங்களிலிருந்து ரயில்களை இயக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம், மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
''வட மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்த லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள், கரோனா தொற்றின் காரணமாக அவரவர் மாநிலங்களுக்குத் திரும்பிச் சென்று விட்டனர். இதனால் தமிழ்நாட்டில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டபோதும் தொழிற்சாலைகளிலும், வியாபார நிறுவனங்களிலும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மறுபுறம், தென் மாவட்டங்களில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி அலைகிறார்கள். குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் வேலைவாய்ப்பு இருந்தும் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், தென் மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் வர முடியாத சூழல் உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு தென்னக ரயில்வேயும், மத்திய அரசும் தென் மாவட்டங்களிலிருந்து ரயில்களை உடனடியாக இயக்கிட நடவடிக்கை வேண்டும்''.
இவ்வாறு கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.