தமிழகம்

பொது முடக்கத்தில் மின் கட்டண உயர்வு: கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் கண்டனம்

கா.சு.வேலாயுதன்

கரோனா பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில், மின் கட்டணம் மறைமுகமாக அதிகரிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

''பொதுமுடக்கத்தைப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் தலையில் சுமத்துகிறது மின் வாரியம். இந்த மறைமுகக் கட்டண உயர்வைத் திரும்ப பெற வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார் கோவை மார்க்சிஸ்ட் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
''ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.1.80 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.3.60 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது. உதாரணமாக, ஜனவரி மாதத்தில், சுமார் 310 யூனிட்களுக்குள் மின்சாரத்தைப் பயன்படுத்திவந்த நுகர்வோர்கள், அதற்குக் கட்டணமாக ரூ.560 கட்டிவந்தனர். தற்போது பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு மொத்தமாக 1,240 யூனிட் என தீர்மானித்து ரூ.4,584 மின் கட்டணத்தைக் கட்டுமாறு, கோவையைச் சேர்ந்த பத்மநாதன் என்ற பயனீட்டாளருக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் அனைத்து மின் பயனீட்டாளர்களும் கூடுதல் கட்டணத்தைச் செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

அரசு அறிவிப்பின்படி, 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணம் ஏதும் வசூல் செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட யூனிட் அளவுக்கு மேல் பயன்படுத்தும் பயனீட்டாளர்களுக்குக் கூடுதல் கட்டணத்தை மாநில அரசு நிர்ணயித்து வருகிறது. இதன்படி, மின்சாரப் பயன்பாட்டுக்கு ஏற்ப ஒரு யூனிட்டுக்கான கட்டணமும் மாறும்.

தற்போது கரோனா காலத்தில், எவ்விதக் கட்டணச் சலுகையையும் அளிக்காமல் மூன்று மாதத்துக்கான மொத்தப் பயன்பாட்டின் அடிப்படையில் மின் யூனிட்டுகளைக் கணக்கிட்டு, அதற்கான தொகையைச் செலுத்துமாறு மின்வாரியம் கூறியுள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது மட்டும் அல்ல; மாத வருமானம் இழந்து தவிக்கும் சாதாரண மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றும் செயலும் ஆகும்.

தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மக்கள் அடிப்படைத் தேவைகளுக்குக்கூட திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரத்திலிருந்துதான் தொழில்களுக்குக் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் பெரும்பாலான தொழில்கள் தொடங்கப்படாமல் முடங்கியுள்ளதால் மக்கள் வருமானம் இன்றித் தவித்து வருகின்றனர். மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்குமாறு சிறு, குறு தொழில் அமைப்புகள் கோரி வருகின்றன.

இப்படியான ஒரு சூழலில் மின் கட்டணத்தை மறைமுகமாக ஏற்றியுள்ளதோடு, வருமானத்தை இழந்து தவிக்கும் மக்களுக்குக் கூடுதல் நெருக்கடி தரும் வகையில் மின்வாரியத்தின் செயல்பாடு இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கை மின்வாரியம் உடனடியாகக் கைவிட வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT