காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்வதால், மேட்டூர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 4,159 கனஅடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் 101.05 அடியாக உயர்ந்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியதை அடுத்து, தமிழக காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கப்படாத நிலையிலும், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அணைக்கு நேற்று விநாடிக்கு 2,389 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ள நிலையில், நீர் வரத்து இன்று (ஜூன் 1) காலை அதிகரித்து விநாடிக்கு 4,159 கன அடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர் மட்டம் 46.50 அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு 108 கன அடியாகவும் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
292 நாட்களைக் கடந்த நிலையிலும், அணையின் நீர் மட்டம் 100 அடிக்குக் குறையாமல் நீடித்து வருகிறது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால், நேற்று 100.86 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 101.05 அடியாக அதிகரித்தது. அணையின் நீர் இருப்பு 65.96 டிஎம்சியாக இருந்தது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்னும் 10 நாட்களில் காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட உள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டமும், நீர் வரத்தும் அதிகமாக இருப்பது, விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.