கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 1) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன் வரிசை பணியாளர்கள் சிலர் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில் ஆரம்பத்தில் அரசு அறிவித்த பணியிலிருக்கும்போது இறந்தவர்களின் குடும்பத்திற்கான ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனமும் வழங்கப்படாதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இது சம்பந்தமாக இதுவரை ஐந்து மரணங்கள் எங்கள் கவனத்திற்கு வந்துள்ளன.
1) திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் வருவாய் ஆய்வாளர் சேகர்
2) காஞ்சிபுரம் நகராட்சி வருவாய் அலுவலர் தமிழ்ச் செல்வி
3) காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம் கிராம நிர்வாக அலுவலர் இராஜாராம்
4) சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா. இவர் பணி ஓய்வுக்குப் பின்னர் சிறப்பு பணி நீட்டிப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு கரோனா தொற்று இருந்ததாக முதலில் கூறிவிட்டு பின்னர் வேறு காரணத்தை கூறுவதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
5) சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் யுனானி மருத்துவராக பணியாற்றி வந்த அப்ரோஸ் பாஷா. இவரது மரணம் கரோனா சிறப்பு சிகிச்சை பிரிவிலேயே நிகழ்ந்துள்ளது. இந்த மரணமும் வேறு காரணத்தால் நிகழ்ந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் கிராம நிர்வாக அலுவலர் குமார் அலுவலக பணி முடித்து செல்லும் போது விபத்தில் இறந்த சூழலில் அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலையும் தரப்பட்டதை பெரிய அளவில் விளம்பரம் செய்த அரசு பின்னர் அதேபோன்ற சூழல்களில் உயிரிழந்த ஊழியர்களுக்கு அதே நிவாரணம் தர மறுப்பது ஏன்?
செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா மற்றும் ஒப்பந்த மருத்துவர் அப்ரோஸ் பாஷா மரணங்கள் வேறு காரணங்களால் நிகழ்ந்தது என பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குவதோடு, முன் வரிசை பணியாளர்களின் தார்மீக உணர்வையும் சிதைப்பதாக கருதுகிறோம்.
ஊரடங்கு காலத்தில் இவர்கள் உயிரையும் பணயம் வைத்து ஆற்றிய பணியை கணக்கிற் கொண்டு இவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனமும் வழங்க வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது"
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.