புதுச்சேரி சட்டப்பேரவை ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பேரவை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்க எண்களிலேயே கரோனா நோயாளிகள் இருந்து வந்தனர். மேலும் தொற்று பரவுதலும் எப்போதாவதுதான் ஏற்பட்டது. ஆனால், கோயம்பேடு சந்தைக்குச் சென்று திரும்பிய சிலரால் தொற்று அதிகரிக்கத் தொடங்கியது.
அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்குத் தொற்று ஏற்பட்டு வருகிறது. ஜிப்மர் மருத்துவர், கர்ப்பிணி பெண், வங்கி ஊழியர் என பலருக்கும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இதுவரை புதுச்சேரியில் 74 பேர் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அமைச்சரவை ஊழியர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் பணியாற்றிய சட்டப்பேரவையின் மூன்றாம் தளம் இன்று (ஜூன் 1) திறக்கப்படவில்லை. அவருடன் தொடர்பில் இருந்த ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் சட்டப்பேரவை வளாகம் முழுவதும் இன்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் சட்டப்பேரவை மைய மண்டபம், முதல்வர் அலுவலகம், அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் அலுவலகம் என அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்தனர்.
சட்டப்பேரவை முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் வந்து செல்லும் இடம் என்பதால் அங்கு வரும் அனைவரின் உடல் வெப்பநிலை அறிந்தும், கிருமி நாசினி கொண்டு கையை சுத்தப்படுத்தியும் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இருப்பினும் சட்டப்பேரவை ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது சட்டப்பேரவைக்கு வரும் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.