திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில் தளர்வு கொண்டுவரக் கோரி தமிழ்நாடு டென்ட் மற்றும் டெக்கரேசன் நலச்சங்கம் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.ரத்னாவிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
"கரோனா வைரஸ் காரணமாக அரசு ஊரடங்கு பிறப்பித்தது. இதனால் கோயில் திருவிழாக்கள், கட்சிக் கூட்டங்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன. திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது நடைபெறும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு பந்தல், டெக்கரேசன் உள்ளிட்ட தேவைகள் இல்லாமல் போய்விட்டன.
இதனால் இந்தத் தொழிலை நம்பியுள்ள பலரும் வேலையிழந்து வருமானம் இன்றித் தவித்து வருகிறோம். மேலும், இந்தப் பொருட்களை வாங்குவதற்காகப் பெற்ற கடன்களை அடைக்க முடியாத சூழலில் உள்ளோம். எனவே, எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்குத் தளர்வு கொடுத்து கூடுதல் நபர்கள் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், கிருமிநாசினி தெளித்தல், சானிடைசர் கொண்டு கை கழுவுதல் ஆகியவற்றையும் சிறப்புடன் நாங்களே செய்து தர தயாராக உள்ளோம். எனவே, சுப நிகழ்ச்சிகளுக்குத் தளர்வு தர வேண்டும்".
இவ்வாறு கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.