தமிழகம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், தலைமைச் செயலக அதிகாரி போல் நடித்து பண மோசடி செய்த இளைஞர்: போலீஸாரைத் திகைக்க வைத்த போலி அரசாணை

செய்திப்பிரிவு

ஐஏஎஸ், ஐபிஎஸ், தலைமைச் செயலக அதிகாரி போல் நடித்து தனி அலுவலகம் வைத்து இயங்கிய இளைஞர் ராமநாதபுரத்தில் நேற்று கைது செய்யப்பட்டார். ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் கைதான அவர் வெளியில் வந்து மீண்டும் கைவரிசை காட்டும்போது சிக்கினார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் டெய்சி. தனது மருமகனுக்கு அரசு வேலைக்காக பலரிடம் உதவி கேட்டு வந்துள்ளார். அப்போது தூத்துக்குடி ஆரம்ப சுகாதார மையத்தில் வேலை பார்க்கும் தனது மகள் மூலம் சென்னையில் சுகாதாரத் துறையில் வேலை பார்க்கும் ஜார்ஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

''தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் ஐஏஎஸ் அதிகாரி பிரகாஷ் எனக்கு மிகவும் பழக்கம். அவருக்குப் பல துறைகளின் முக்கிய அதிகாரிகளைத் தெரியும். அவர் மூலம் முயற்சி செய்தால் நிச்சயம் வேலை வாங்கித் தருவார்'' என்று கூறிய ஜார்ஜ், பிரகாஷின் பல போட்டோக்களை டெய்சியிடம் காட்டியுள்ளார்.

''பிரகாஷ் இதுபோல் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். அவருக்கு இது சாதாரண விஷயம். ஒரு நபர் அல்ல, எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள். தலைக்கு ரூ.5 லட்சம் அப்பாயின்மென்ட் ஆர்டர் கை மேல் கிடைக்கும். ஆர்டரை வாங்கிக்கொண்டு பிறகு பணம் கொடுத்தால் போதும்'' என ஜார்ஜ் மேலும் அளந்து விட்டிருக்கிறார்.

போலி லெட்டர் பேட்

ஜார்ஜ் பேச்சில் முழுமையான நம்பிக்கை பெற்றதால் தனது மருமகனுக்கு மட்டுமல்ல, குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரசு வேலை வாங்கித் தரவேண்டும் என டெய்சி கேட்டுள்ளார். ''அதற்கென்ன, தாராளமாக விவரத்தைக் கொடுங்கள், வேலையைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' என ஜார்ஜ் சொல்ல, அப்போதே அரசு வேலை கிடைத்தது போல் டெய்சி மகிழ்ந்து போனார்.

இதுகுறித்து ஜார்ஜ் ஏற்பாட்டின் பேரில் பிரகாஷிடம் டெய்சி பேசியுள்ளார். விவரங்களை அனுப்பச் சொன்ன பிரகாஷ், அதை மேலதிகாரிகளுக்கு அனுப்பியது போன்று டெய்சிக்கு அரசு அலுவலகக் கடிதம்போல் சிலவற்றை அனுப்பியுள்ளார். அதை நம்பிய டெய்சி பணம் ஏற்பாடு செய்துள்ளார். பணம் கொடுத்த உடன் பணியாணை தருவதாக பிரகாஷும் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதையடுத்து மூவரின் கல்வி ஆவணங்களையும், தலைக்கு ரூ.5 லட்சம் என மூவருக்கு ரூ.15 லட்சம் ரொக்கப் பணத்தையும் எடுத்துக்கொண்டு ஜார்ஜுடன் ராமநாதபுரம் பேருந்து நிலையம் வந்துள்ளார் டெய்சி. அங்கு காரில் வந்த பிரகாஷ், டெய்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சாக்குபோக்குச் சொல்லி டெய்சியை ஏமாற்றித் தப்பியுள்ளார்.

போலி விசிட்டிங் கார்டு

இதனால் அதிர்ச்சியடைந்த டெய்சி இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு ஜார்ஜ், பிரகாஷ் இருவரின் போன் நம்பர்கள், கார் எண் கண்காணிக்கப்பட்டதில் ராமநாதபுரத்தை விட்டு இருவரும் தப்பிச் செல்லும் முன் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த ஆவணங்களைப் பார்த்ததும் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவ்வளவு துல்லியமாக அரசாணை போல் அந்த ஆவணங்கள் இருந்தன.

அசலைப் போலவே, மிக நுட்பமாக போலியான பணியாணைகளை இக்கும்பல் தயாரித்திருந்தது. பின்னர் பிரகாஷை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், அவர் செல்போனைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

போலி ஆவணங்கள்

பிரகாஷின் உண்மையான பெயர் நாவப்பன். திருவண்ணாமலை, செங்கம் பகுதியைச் சேர்ந்த இவர், அரசு அதிகாரி எனப் பலரிடம் மோசடி செய்தவர். அவ்வாறு மோசடி செய்யும் போது சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு ஓராண்டு குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்த்துள்ளது.

அரசுப் பணியில் சேர அதிக ஆர்வம் கொண்டிருந்த பிரகாஷ், குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் தோல்வி அடைந்ததால் மீண்டும் முயன்று அதிகாரி ஆகாமல் குறுக்கு வழியில் ஐஏஎஸ் அதிகாரி போல் நடித்து மோசடி மன்னனாக மாறியுள்ளார். அரசுப் பணிக்குப் படித்ததால் அனைத்து காவல், ஆட்சிப் பணி குறித்த விவரங்கள் பிரகாஷுக்கு அத்துப்படி என்பதால் கேட்பவர்கள் நம்பும் வண்ணம் கதை விட்டுள்ளார்.

இவர் ஆட்சியராகவே மாறி அலுவலகம், கார் என ஐஏஎஸ் அதிகாரி போலவே வலம் வந்துள்ளார். பல திரையுலகப் பிரமுகர்களும் இவரிடம் ஏமாந்துள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள தொலைக்காட்சி ஒன்றின் செய்திப் பிரிவில் இருக்கும் நபர் மூலம் அவர் அரசின் ஜிஓக்கள், அறிவிப்புகள், அதிகாரிகளின் கடிதங்களின் மாதிரிகளைப் பெற்றதாகத் தெரியவந்துள்ளது. தலைமைச் செயலகத்தின் கடிதம்போல் தயார் செய்ய அவற்றை அவர் பயன்படுத்தியுள்ளார்.

குண்டர் சட்டத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த பிரகாஷ், சென்னையிலிருந்தால் சிக்கிக் கொள்வோம் என நினைத்து, வெகுதூரம் உள்ள பிற மாவட்டங்களில் மோசடி செய்து வந்துள்ளார். இவ்வாறு ஏமாற்றி முறைகேடாகச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு அவர் வாழ்ந்து வந்ததும் செல்போனில் உள்ள தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

போலி லெட்டர் பேட்

பிரகாஷ் ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி அதிகாரி, தலைமைச் செயலக அதிகாரிபோல் எத்தனை பேரை ஏமாற்றியுள்ளார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பெல்லாம் இதுபோன்று மோசடி, திருட்டுத்தனத்தில் இயங்கி சிக்கும் கிரிமினல்கள் சிறையிலிருந்து வெளியில் வந்தால் சம்பந்தப்பட்ட போலீஸாரும், நுண்ணறிவுப்பிரிவு போலீஸாரும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார்கள். தற்போது அதெல்லாம் பழங்கதையாகிவிட்டது. அதனால்தான் இவரைப் போன்ற மோசடிப் பேர்வழிகள் அடுத்தடுத்து பொதுமக்களை ஏமாற்றுகின்றனர் என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மோசடி நபர் பிரகாஷ் மாவட்ட ஆட்சியர்போல், உயர் அதிகாரி போல் கரோனா பரவல் நேரத்தில் மாவட்டம் இடையே செல்ல போலி இ பாஸ்களையும் தயாரித்து வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT