புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்படும், தென் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த முதல்வர் ஜெயலலிதா, "தமிழ்நாட்டு மக்களுக்கு தகுதியான மருத்துவர்களைக் கொண்டு மருத்துவ வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசின் முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாகும்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது என்பது ஒரு தொலைநோக்கு திட்டமாகும்.
இந்திய மருத்துவக் குழுமத்தின் நெறிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரிகளுக்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள், தேவையான கட்டமைப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும்.
ஆண்டிற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்ற அடிப்படையில் எனது அரசு புதிய மருத்துவ கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில், சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி:
ஏற்கெனவே செயல்பட்டு வரும் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதலாக 410 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த தொடர் முயற்சிகளினால், கூடுதலாக 710 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கரூரில் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மேலும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரி புதுக்கோட்டையில் தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென் தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி:
தமிழ்நாட்டில், ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. அதிமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, இந்த பல் மருத்துவக் கல்லூரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் காரணமாக, முதுகலை பல் மருத்துவப் படிப்பு மாணவர்கள் சேர்க்கை 35-லிருந்து 58-ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் பல் மருத்துவமனை ஓர் ஒப்புயர்வு மையமாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், 50 கோடி ரூபாய் செலவில், தென் தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும்" என்றார்.