பிரதிநிதித்துவப் படம். 
தமிழகம்

புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு  

அ.முன்னடியான்

புதுச்சேரியில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் நேற்று வரை 70 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவற்றில் 46 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் மேலும் தற்போது 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 49 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74 ஆகவும் உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 1) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் ஏற்கெனவே 46 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் ஒருவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இந்நிலையில், நேற்று 51 பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் கொம்பாக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேர், அன்னை தெரேசா நகரைச் சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து அவர்கள் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல் சென்னையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது புதுச்சேரியைச் சேர்ந்த 49 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மாநிலத்தில் கரோனா தொற்றால் மொத்தம் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். புதுச்சேரியில் தற்போது 22 கட்டுப்பாட்டு மண்டலப் பகுதிகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT