ராமதாஸ்: கோப்புப்படம் 
தமிழகம்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும்: ராமதாஸ்

செய்திப்பிரிவு

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்க முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாலர்களுக்கு மே மாத ஊதியம் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை எதிர்த்து போக்குவரத்துத் தொழிலாளர்களும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது போலவே மே மாதத்திற்கான முழு ஊதியம் வழங்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 1) தன் ட்விட்டர் பக்கத்தில், "போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு மே மாத ஊதியத்தை முழுமையாக வழங்க நிர்வாகங்கள் மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டது போலவே, மே மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்க போக்குவரத்துக் கழகங்கள் முன்வர வேண்டும்!

ஊரடங்குக் காலத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வராத நாட்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டுள்ள நிலையில், அதைப் போக்குவரத்துக் கழகங்கள் மதிக்காமல் இருப்பது நியாயமல்ல. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தை வழங்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT