கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மேற்கொள்ளும் விதிமுறைகளை மக்கள் அனைவரும் 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 1) வெளியிட்ட அறிக்கை:
"மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக, நாட்டின் பொருளாதாரம் உயர தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருவது மக்கள் நலன் காக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் விவேகமான, விரைவான நடவடிக்கைகளால் கரோனா பரவலும், பாதிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஆயினும் அதற்கு எதிரான போர் இன்னும் தொடர வேண்டியுள்ளது.
கரோனோ வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு 4 முறை அமல்படுத்தப்பட்டது. 4 ஆம் கட்ட ஊரடங்கு நேற்று, மே 31-ம் தேதி முடிவடைந்தது. இந்த 4 கட்ட ஊரடங்கு காலமான 69 நாட்களில் மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடமை உணர்வோடு கடைப்பிடித்ததற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதனைத் தொடர்ந்து இப்போது 5-வது முறையாக மீண்டும் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நாடு முழுமைக்கும், தமிழக அரசு மாநிலம் முழுமைக்கும் ஊரடங்கு தொடர்பான விதிமுறைகளையும், வழிமுறைகளையும், தளர்வுகளையும் அறிவித்திருக்கிறது.
இச்சூழலில் தமிழக அரசு ஊரடங்கு தொடர்பாக 8 மண்டலங்களாகப் பிரித்து தளர்வுகளுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக ஆட்டோக்களில் 2 பயணிகள் செல்லலாம், வாடகை காரில் 3 பயணிகள் செல்லலாம், பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி, உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிடலாம், முடி திருத்தும் நிலையங்கள் திறக்கலாம், சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.2,500 மதிப்பூதியம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கெனவே தமிழக அரசின் சுகாதாரத்துறை, காவல் துறை, தூய்மைப்பணி - உள்ளாட்சித்துறை, வருவாய்த் துறை போன்ற துறைகளின் மூலம் கரோனா வைரஸ் தடுப்புக்கு, சிகிச்சைக்குத் தயார்படுத்திக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது.
இருப்பினும் உலக அளவில் கரோனா தடுப்புக்கு உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதால் நோயைக் கட்டுப்படுத்துவது சவாலான பணியாக இருக்கிறது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் கரோனாவை மேலும் கட்டுக்குள் கொண்டுவந்து முழுமையாக ஒழிப்பதற்கும், பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.
எனவே, தமிழக மக்கள், மத்திய, மாநில அரசுகள் இப்போது நீட்டித்திருக்கிற ஊரடங்கைக் கடைப்பிடிக்கும்போது வழிமுறைகளை 100 சதவீதம் பின்பற்ற வேண்டும். மேலும், அவசிய, அத்தியாவசியத்திற்குத் தவிர தேவையற்ற பயணத்தைத் தவிர்த்து கரோனா பரவலில் இருந்து காப்பாற்றிக்கொள்ளவும், வருங்கால சந்ததியினருக்கு நல்வாழ்க்கை அமைத்துக்கொடுக்கவும் முன்வர வேண்டும்.
எனவே, மத்திய, மாநில அரசுகள் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற தமிழக மக்கள் அனைவரும் விதிமுறைகளை, வழிமுறைகளை 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.