கோவையைச் சேர்ந்த 19 சிறு, குறுந் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந் தொழிற்கூடங்கள் மூலம் லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கரோனா தாக்கம், சர்வதேச பொருளாதார நிலை காரணமாக தொழில் துறை பெரிதும் முடங்கி யுள்ளது. நெருக்கடிகளில் இருந்து மீள தமிழக அரசு உதவ வேண்டும்.
குஜராத், ஆந்திரா மாநிலங் களைப்போல மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின் கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். வங்கிகளில் கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, குறைந்த வட்டியில், நிபந்தனையற்ற கடன்களை வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழில் அமைப்புகளுக்கு ரூ.1 லட்சம் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தினோம். முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியளித்தார். இவ்வாறு தொழில் துறையினர் தெரிவித்தனர்.